தமிழகர்கள் இந்தி கற்றுக்கொள்வது தவறில்லையா? - பீதியை கிளப்பும் ‘லேபர்’ திரைப்படம்
கட்டிட தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும் மிகவும் யதார்த்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம் 'லேபர்'. குடிகாரர்களால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் சீரழிவதையும், கூடவே திருநங்கையரின் வாழ்க்கை முறையையும் இதுவரை யாரும் சொல்லாத விதத்தில், பேசாத பதத்தில் பெரிய அளவில் பேசி இருக்கும் படம் தான் 'லேபர்'.
இதில் கதை நாயகராக முத்து, கதை நாயகியாக சரண்யா ரவிச்சந்திரன் இருவருடன் ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்ரமணியன், பெரோஸ்கான், கமல் உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்துள்ளனர்.
ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள, இப்படத்திற்கு கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார், நிஜில் தினகரன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவும் செய்து சத்தியபதி இயக்கியுள்ளார்.
’லேபர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க பிரதிநிதி கே.ராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சங்க பிரதிநிதிகள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு திருமலை உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட நிகழ்வில் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.
இந்த நிலையில், டிரைலரில் இடம் பெரும் காட்சி ஒன்றில், தாநாயகி உடன் இருக்கும் ஒரு வட இந்திய தொழிலாளியைப் பார்த்து "எனக்கு நீ இந்தி கற்றுத்தருகிறாயா.?!' என கேட்பது போன்று வரும் வசனத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம், தமிழர்களை இந்தி கற்றுக்கொள்ள தூண்டுவதாகவும், அப்படி இந்தி கற்றுக்கொள்வது ஒன்றும் தவறில்லை என்று வலியுறுத்துவது போன்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு படி தான் ‘லேபர்’ திரைப்படம் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகி சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், பிஜேபி பிரபலமும் நடிகையுமானகாயத்ரி ரகுராமும், ’திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ பட இயக்குநர் மோகன்.ஜியும் இப்படத்தின் டிரைலரி ரீ-டுவிட் செய்து இருப்பதால், இது பி.ஜே.பி-யின் பிரச்சார படம் என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பதால் தமிழக அரசியலின் கவனம் தற்போது ‘லேபர்’ திரைப்படம் மீது திரும்பியுள்ளது.
இப்படி பெரும் சர்ச்சையை உருவாக்கி, மக்களிடம் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ‘லேபர்ர்’ வரும் டிசம்பர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.