Oct 03, 2017 03:08 PM

ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைத்திலும் மாற்றம் வரும் - லதா ரஜினிகாந்த்

ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைத்திலும் மாற்றம் வரும் - லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்  அரசியலுக்கு வந்தால் அனைத்திலும் மாற்றம் செய்வார், என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

ஸ்ரீ தயா அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் லதா ரஜினிகாந்த், குழந்தைகள் திருட்டு மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தி, இதுபோன்ற தீமைகளில் சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

 

இதற்காக பல்வேறு சமூக ஆர்வளர்களுடன் கைகோர்த்துள்ள லதா ரஜினிகாந்த், அரசு துறையிடமும் கைகோர்த்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில், குழந்தை கடத்தல் மற்றும் கடத்தப்படும் குழந்தைகள் கண்டுபிடிக்க முடியாமல் போவது ஏன்? என்ற தலைப்பில் சென்னையில் இன்று ஸ்ரீ தயா அறக்கட்டளை சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் பலர் கலந்துக்கொண்டு இந்த விவாகரத்தில் உள்ள சிக்கல்களை விளக்கமாக பேசியதோடு, இனி லதா ரஜினிகாந்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படுவோம், என்று வாக்குறுதி அளித்தனர்.

 

இந்த நிகழ்வில் பேசிய லதா ரஜினிகாந்த், “குழந்தைகள் வலியால் அழலாம், பசியால் அழலாம், ஏமாற்றத்தால் அழலாம், ஆனால் துன்பத்தால் மட்டும் அவர்கள் அழக்கூடாது. அப்படி அழுதால் மழை வராது, இயற்கை சீற்றம் ஏற்படும். ஏனேன்றால் குழந்தைகள் கடவுள்களில் உருவம், அவர்களை கஷ்ட்டப்படுத்தினால் பூமி தாங்காது. அதனால், நாம் ஒன்றாக இணைந்து குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்போம்.” என்றவரிடம், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்த லதா ரஜினிகாந்த், “அவர் (ரஜினிகாந்த்) அரசியலுக்கு வந்தால் அனைத்திலும் மாற்றம் வரும், அனைத்துவிதமான நன்மைகளையும் செய்வார். ஒன்றல்ல நூறு நன்மைகளை செய்வார், ஆனால் அது என்னவென்று அவர் மனதில் தான் இருக்கிறது, அவருக்கு தான் அது தெரியும்.” என்றார்.

 

சாலையில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு இலவச பாடபுத்தகம், ஆடைகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவாசிய பொருட்களை வழங்கி வரும் ஸ்ரீ தயா அறக்கட்டளை, அவர்கள் தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்து வருகிறதாம் அக்குழந்தைகளுக்கு மேலும் பல உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ள ஸ்ரீ தயா அறக்கட்டளை அது குறித்து விரிவாக விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.