Sep 01, 2024 09:37 AM

”ரஜினி சாருக்கு வழி விடுவோம்”! - சூர்யாவுக்கு எவ்வளவு பெரிய மனசு

”ரஜினி சாருக்கு வழி விடுவோம்”! - சூர்யாவுக்கு எவ்வளவு பெரிய மனசு

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் ‘கங்குவா’ அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், அதே தேதியில் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படமும் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டது. ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டு தேதி முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினி படம் சூர்யாவுக்கு போட்டியாக திடீரென்று களத்தில் இறங்கியதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதற்கிடையே, ‘கங்குவா’ திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாவது சிக்கல், என்ற தகவல் வெளியானதோடு, அதற்கு காரணம், படத்தின் பின்னணி வேலைகள் குறிப்பிட்ட தேதியில் முடியாது, என்றும் சொல்லபப்ட்டது. தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் சூர்யா ‘மெய்யழகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.

 

‘96’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சுவாமி நடிப்பில் உருவாகும் ‘மெய்யழகன்’ படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள கொடிசியா மைதனாத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் சூர்யா, “நேற்று இரவு இந்த படத்தை நான் பார்த்தேன். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்து உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதில் அனவருக்கும் நன்றி சொல்லி வருகிறேன். ஜெய்பீம் இயக்குநர் மூலம் தான் படம் என்னிடம் வந்தது. தொப்புள் கொடி உறவு, எங்களுடைய வேர், எங்களின் அடையாளம் கோவை தான். நடிக்க வந்து 27 வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு கோவையில் விழா எடுப்பது ரொம்ப மகிழ்ச்சி. இரத்த சொந்தங்கள் நம்மை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் அன்பு மிக பரிசுத்தமானது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தியை கட்டி பிடித்த படம் இது.

 

அரவிந்த் சுவாமி, கார்த்தி இருவருக்கும் உள்ள பழக்கம் மிகவும் பொறாமைபடும் அளவிற்கு உள்ளது. என் மகன் ஜோதிகா பெயரைத் தான், பெயருக்கு பின்னால் எழுதுவான். அப்படி இசையமைப்பாளர் கோவிந்த் தன்னுடைய அம்மா பெயரை பின்னால் வைத்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் படம் தான் மெய்யழகன். 96 படம் மீது பெரிய மரியாதை எனக்கு உள்ளது. படத்தை படமாக மட்டும் பாருங்கள். வசூல் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்க இல்லாமல் நான் எதும் செய்ய முடியாது. உங்களுக்கு தலை வணங்குகிறேன். கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது எனக்கு தெரியும். 2.5 வருடமாக ஆயிரம் பேருக்கு மேல் உழைக்கும் படம் என்றால், அது கங்குவா தான்.

 

அக்டோபர் 10 ஆம் தேதி வேட்டையன் படம் வருகிறது. ரஜினி சாருக்கு வழிவிடுவோம். அவர் மூத்தவர், சினிமாவின் அடையாளம். 50 வருடங்களாக நடித்து வருகிறார். அவர் படம் வருவது தான் சரி. கங்குவா ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்து கொள்வீர்கள். கங்குவா படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். வெறுப்பை காண்பிக்க வேண்டாம். அன்பை மட்டும் பகிர்வோம். கங்குவா படம் வரும்போது நின்று பேசும்” என்றார்.

 

நடிகர் கார்த்தி பேசுகையில், “கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து  வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்கு தான் வருவோம். எங்க அப்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருக்கும். பொற்காலம் என்றால் லீவில் ஊருக்கு வரக்கூடிய நாள் தான். ஊரில் இருக்கும் 10 நாளும் அருமையாக இருக்கும். 8 பேருக்கு விறகு வைத்து சமைத்து அனைவருக்கும் பரிமாறுவார்கள். குடும்பத்தினர் உறவு தான் மெய்யழகன் படம். 96 படத்தில் காதலிப்பவர்களை பிரேம்குமார் கதற விட்டார், காதல் பண்ணாதவர்களை ஏங்கவிட்டார். பிரேம் குமாரின் வசனங்கள் அருமையாக உள்ளது. மெல்லிய உணர்வுகள் தரும் படம் பண்ண நான் ஏங்கிய காலம் உள்ளது. குடும்பத்தின் உறவுகளும், வேர்களும் குறித்து இந்த படம் பேசும். 

 

போன் இருந்தால் போதும் யார் கூடவும் பேச வேண்டாம் என்று ஆகிவிட்டது. ஆனால் அப்படி கிடையாது. அப்படி இருக்கக் கூடாது பிரேம் குமார் என்ற இயக்குநரை வெளியே கொண்டு வந்த நடிகர் விஜய் சேதுபதி நன்றி சொல்ல வேண்டும். காதலே காதலே என்ற ரிங்டோன் எல்லா பக்கமும் ஒலித்து கொண்டு இருக்கிறது. சிங்கத்திடம் கொடுத்தால் படம் நன்றாக வரும் என்பதால், படத்தை அண்ணாவிடம் கொடுத்து விட்டேன். ஜல்லிக்கட்டு படப்பிடிப்பு எனக்கு புதுமையாக இருந்தது. உடம்பில் கருப்பசாமி வந்துவிட்டார் என்ற வசனம் எல்லாம் உடம்பு சிலிரிக்க வைக்கிறது. ஒரே வாரத்தில் இந்த கதையை எழுத்தியுள்ளார் இயக்குநர். லோகேஷ் கனகராஜ் நைட் எப்படி என்னை வெச்சு செய்தாரோ, அதே மாதிரி தான் பிரேம்குமாரும் இரவு முழுவதும் துங்க விடாமல் படம் எடுத்தார்” என்றார்.

 

Meiyazhagan Audio Launch

 

இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், “மெய்யழகனை முதலில் சிறுகதையாக தான் பண்ணினோம். பின்னர் படமாக பண்ண சொல்லியவர் விஜய் சேதுபதி தான். இந்தக் கதையை யாரும் பண்ண முன்வருவார்கள் நான் நம்பவில்லை. ஆனால் கார்த்தி சார் படித்து விட்டு ஒகே சொல்லியது மிகவும் மகிழ்ச்சி. அரவிந்த்சாமி சார் படம் பண்ணலாம் என்று சொல்லிய பின்புதான் படத்திற்கு முழு உருவம் கிடைத்தது. நீங்க கேட்கும் இசையை நாங்கள் பெரிய ஸ்டுடியோவில் பண்ணவில்லை. கொட்டும் மழையில் ஒரு வீட்டின் ஓரத்தில் தான், இந்த இசையை நாங்கள் உருவாக்கினோம். இது குடும்ப உறவுகள் பற்றிய படம். நான் கொஞ்சம் சோம்பேறி, இனி எழுதுவதை வேகப்படுத்த வேண்டும். அன்பு பற்றி படம் எடுத்துள்ளேன். 96 படத்திலும் அன்பு தான் சொல்லியிருந்தேன். 96 படத்தை விட இதில் அதிகம் இருக்கும்” என்றார்.

 

நடிகர் சிவக்குமார், ”சூலூர் அருகே உள்ள காசிகவுண்டர்புதூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி இல்லாத ஊரில் படித்து முன்னேறியவன் நான். 7 வருடம் படிக்க எனக்கு, 7 ஆயிரம் தான் செலவு ஆனது.  சினிமா நடிகர் என்பதால் எனக்கு யாரும் பெண் தரவில்லை. புஞ்சை புளியம்பட்டி பகுதியில் தான் எனக்கு பெண் தந்தார்கள். சூர்யா, கார்த்தி சினிமாவிற்கு வரக்கூடாது என ஒளித்து வைத்து இருந்தேன். ஆனால் கடவுள் அவர்களை சினிமாவிற்கு வர வைத்துவிட்டார். தமிழர்கள் போட்ட பிச்சை தான் இவ்வளவும், எப்போதும் உங்களின் அன்பும், ஆதரவும் வேண்டும்” என்றார்.