Sep 22, 2022 06:50 AM

விமர்சனம் மூலம் செதுக்குங்கள் சிதைக்காதீர்கள் - ‘லோக்கல் சரக்கு’ விழாவில் சினேகன் கோரிக்கை

விமர்சனம் மூலம் செதுக்குங்கள் சிதைக்காதீர்கள் - ‘லோக்கல் சரக்கு’ விழாவில் சினேகன் கோரிக்கை

யோகி பாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார்.  டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி, கே.ராஜன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பாடலாசிரியர் சினேகன், நடிகை இனியா, நடிகர் சென்ராயன், இயக்குநர்கள் கவிதா பாரதி, பொன் ராம், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் கருணாகரன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, “இங்கு பேசும்போது பல இசையமைப்பாளர்களை சங்கர் கணேஷ் சார் அறிமுகம் செய்து வைத்ததாக சொன்னார்கள், என்னையும் அவர் தான் அறிமுகம் செய்து வைத்தார். என்னை வீணை கலைஞராக சங்கர் கணேஷ் சார் தான் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் அவர் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் ராஜேஷை பார்க்கும் போது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ராஜேஷ் ஒரு இசையமைப்பாளர் மட்டும் இன்றி நல்ல மனம் படைத்தவர், கொரோனா காலத்தில் இசை கலைஞர்கள் சங்கத்தில் 500 பேருக்கு தலா 25 கிலோ அரிசி கொடுத்தார். அதுமட்டும் இன்றி, பல ஏழைகளுக்கு இலவசமாக பல நாட்கள் உணவு வழங்கினார். இதுபோன்ற பல உதவிகளை அவர் கொரொனா காலத்தில் செய்து வந்தார். அவருடைய இந்த நல்ல மதனுக்காக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக நான் வேண்டிக் கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகர் ராதாரவி பேசுகையில், “இசையமைப்பாளார் ராஜேஷ் இந்த படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். அவர் பல வேலைகளை இழுத்து போட்டு செய்து வருகிறார். டி.ராஜேந்தரும் இப்படி தான் பல வேலைகள் செய்வார். அந்த வகையில் டி.ராஜேந்தரை போல் ராஜேஷும் சகலகலா வல்லவனாக இருக்கிறார். என்னிடம் படத்தின் தலைப்பை சொன்ன போதே இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை வந்தது. லோக்கல் சரக்கு என்பது அனைவருக்கும் பிடித்தமான தலைப்பு. காரணம், லோக்கல் சரக்குக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இந்த சரக்கு இல்லை என்றால் எந்த அரசையும் நடத்த முடியாது. படத்தின் பாடல்கள் மிக நன்றாக இருந்தது. வார்த்தைகள் புரிந்தது. எனவே ராஜேஷ் இசையமைப்பாளராக மட்டும் இன்றி ஒரு தயாரிப்பாளராகவும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், “இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதவில்லை. யார் எழுதியிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால், ராஜேஷ் என்னை அழைத்தவுடன் வந்துவிட்டேன். பாடல்களை பார்த்தேன் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக பாடல்களின் வரிகள் புரியும்படி ராஜேஷ் இசையமைத்திருக்கிறார். இப்போது சில இசையமைப்பாளர்கள் வரிகளை சத்தத்தால் சாகடித்து விடுகிறார்கள். அப்படி செய்யாமல் வரிகளை புரியும்படி இசையமைத்திருக்கும் ராஜேஷுக்கு எனது பாராட்டுகள். படம் நிச்சயம் வெற்றி பெறும்.

 

யூடியுப் வீடியோக்களில் தலைப்பு என்ற பெயரில் பல தவறான விஷயங்களை போடுகிறீர்கள். வீடியோவில் இருக்கும் விஷயத்திற்கும் அந்த தலைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், அதுபோன்ற தவறான தலைப்புகளை வைப்பது அதிகரித்து விட்டது. தயவு செய்து அதை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். மேலும், உங்களுடைய விமர்சனங்கள் எங்களை செதுக்க வேண்டுமே தவிர சிதைக்கும்படி இருக்க கூடாது, என்றும் கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

 

இயக்குநர் பொன்ராம் பேசுகையில், “இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் சாரின் காமெடிகளை நான் அதிகம் பின் தொடர்வேன். நானும் ஒரு காமெடி பட இயக்குநர் தான். வடிவேலு சாருடன் சேர்ந்து பல மறக்க முடியாத காமெடிகளை எஸ்.பி.ராஜ்குமார் சார் கொடுத்திருக்கிறார். நிச்சயம் இந்த படத்திலும் அப்படி பல காமெடிகளை வைத்திருப்பார், என்று நம்புகிறேன். எனவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

 

முன்னதாக விருந்தினர்களை வரவேற்று பேசிய இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், “நான் இசையமைப்பாளராக வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு. இன்று அவருடைய கனவு நிறைவேறி விட்டது. ஆனால், அதை பார்க்க அவர் உயிருடன் இல்லை. இருந்தாலும் கடவுளாக இருந்து என்னை அவர் ஆசிர்வாதம் செய்துகொண்டு தான் இருக்கிறார். இந்த மேடையை நான் பலருக்கு நன்றி தெரிவிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் என் குரு சங்கர் கணேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல ஜாம்பவான்களை உருவாக்கிய அவர் என்னையும் ஒரு இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு நான் அழைத்தவுடன் வந்த அனைத்து பிரபலங்களுக்கும் நன்றி. குறிப்பாக ராதாரவி சார், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமனி, இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா என அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.