Feb 02, 2024 03:41 PM

’லவ் டுடே’ படத்தின் வசூல் சாதனையை ‘லவ்வர்’ முறியடிக்கும்! - விநியோகஸ்தர் சக்திவேலன் நம்பிக்கை

’லவ் டுடே’ படத்தின் வசூல் சாதனையை ‘லவ்வர்’ முறியடிக்கும்! - விநியோகஸ்தர் சக்திவேலன் நம்பிக்கை

’குட் நைட்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான மணிகண்டன் முதல் படத்திலேயே தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிக்கொடுத்த நாயகன் என்ற பெயர் எடுத்திருக்கிறார். இதனால், அவர் மீது திரையுலகின் கவனம் திரும்பியிருப்பதோடு, அவர் நடிக்கும் படங்களும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது படமாக ‘லவ்வர்’ உருவாகியுள்ளது. 

 

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியிருக்கும் இப்படத்தை ‘குட் நைட்’ படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்  ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

 

ஷீன் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. வழக்கம் போல் படம் குறித்து பலர் பாராட்டி பேசினாலும், ஒருவரது பேச்சை மட்டும் ஒட்டுமொத்த கூட்டமும் கூர்ந்து கவனித்தது. அவர் தான் விநியோகஸ்தர் சக்திவேலன். சக்தி ஃபிலிம் பேக்டரியின் நிறுவனரான இவர், வெளியிடும் படங்கள் என்றாலே அது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது. காரணம், நல்ல கதையம்சம் மற்றும் மக்களை கவரக்கூடிய கமர்ஷியல் திரைப்படங்களை தேடிப்பிடித்து வெளியிடும் இவர், ஒரு படம் குறித்து மிகச்சரியாக கணிப்பவர். அதனால் தான், ‘லவ்வர்’ நிகழ்ச்சியில் இவர் என்ன பேசப்போகிறார், என்று பத்திரிகையாளர்களும் கவனிக்க, மனுஷன் “லவ் டுடே படத்தின் வசூல் சாதனையை ‘லவ்வர்’ முறியடிக்கும்” என்று சொல்லிவிட்டார்.

 

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் சுமார் ரூ.72 கோடி வசூல் செய்தது. அறிமுக நடிகர் மற்றும் வளர்ந்து வரும் இயக்குநரின் திரைப்படம் தற்போதைய காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்திருப்பது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சாதனையை ‘லவ்வர்’ முறியடிக்கும் என்று விநியோகஸ்தர் சக்திவேலன் பேசியிருப்பது, அப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

இது குறித்து தொடர்ந்து பேசிய சக்திவேலன், “லவ்வர் படக்குழுவினர்  இதற்கு முன் குட் நைட் எனும் வெற்றிப்படத்தினை வழங்கியவர்கள். அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடவில்லையா? என கேட்ட போது, அவர்கள் அடுத்த படத்தின் படபிடிப்பில் இருந்தனர். அந்தளவிற்கு நம்பிக்கையுடன் இந்த படக்குழுவினர் பணியாற்றினர்.

 

இந்த படத்தைப் பற்றிய செய்திகள் வெளியானவுடன் ஏராளமான விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வெளியீடுவதற்கு முன்பணத்துடன் படக்குழுவினரை அணுகினார்கள். நான் கூட இந்த அளவிற்கு ‘லவ்வர்’ படம் வெளியாகும் முன்பே வணிகம் நடைபெற்றால்.. அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர்களோ இந்த படத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மூலமாக வெளியிடவே திட்டமிட்டிருக்கிறோம் என்று தயாரிப்பாளர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நான் கடந்த வாரம் இந்த படத்தைப் பார்த்தேன். எக்ஸலாண்ட்டான மூவி. இப்படத்தின் பின்னணியிசையை ஷான் ரோல்டன் மிகச்சிறப்பாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் பேசப்படும்.  இந்த படத்தின் டிரைலரில் மணிகண்டன் பேசும் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. அவருடைய நடிப்பை விட அவருடைய குரல் மூன்று மடங்கு கூடுதலாக நடித்திருக்கிறது. மணிகண்டன் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்லும் தகுதியும், திறமையும் பெற்ற நடிகர். ஒரு சாதாரண காட்சியைக் கூட தன்னுடைய நடிப்பால் உயிர்ப்புள்ளதாக்கும் வலிமைக் கொண்டவர். 

 

‘லவ் டுடே’ எப்படி வெற்றியைப் பெற்று வரலாறு படைத்ததோ.. அதை விட கூடுதலாக வசூலித்து இந்த படம் சாதனை படைக்கும். இந்த படம் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கான படம். இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விசயமும் ரசிகர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கும்.” என்றார். 

 

படத்தின் இயக்குநர் பிரபுராம் வியாஸ் படம் குறித்து பேசுகையில், “2019 ஆம் ஆண்டில் நான் மணிகண்டனுக்கு போன் செய்து, உங்களுக்காக கதை ஒன்றை தயார் செய்திருக்கிறேன். சந்திக்கலாமா? எனக் கேட்டேன். அன்று மாலையே வணிக வளாகம் ஒன்றில் சந்தித்து பேசினோம். அந்த முதல் சந்திப்பிலேயே எனக்கு சௌகரியமான சூழலை உருவாக்கினார். அவரிடம் என்னுடைய திரைக்கதையை கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாளே அந்த கதையை வாசித்துவிட்டு, அதைப் பற்றி நிறைய நேரம் பேசினார். நானும் இந்த கதையை எழுதிய பிறகு முதலில் அவரைத் தான் தொடர்பு கொண்டேன். அவருக்கும் இந்த கதை புரிந்து.. அதிலுள்ள நுட்பமான விசயங்களைப் பற்றி பேசியபோது, என்னுடைய எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அதனை எடுத்துக் கொண்டேன். அதனால் மணிகண்டனுக்கு என்னுடைய முதல் நன்றி.

 

நானும், மணிகண்டனும் இணைந்து இந்த கதையை ஏராளமான பட நிறுவனங்களிடம் எடுத்துச்சொல்லியிருக்கிறோம். அதன் பிறகு ஒரு நாள் ‘குட் நைட்’ படத்தின் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் மணிகண்டன் போன் செய்து, ‘உங்களுடைய கதையை குட்நைட் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் உணர்வு பூர்வமாக கதையைக் கேட்டு உங்களை சந்திக்கவேண்டும்’ என்றார். உடனே தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனைச் சந்தித்தேன். அதன் பிறகு  இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

 

நான் எந்த இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றியதில்லை.. இந்த படத்தில் அது தொடர்பான அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டேன். இதற்கு வழிநடத்திய யுவராஜுக்கு நன்றி. இந்த படத்திற்கு பேருதவி அளித்த தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில்  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிகர் கண்ணா ரவி நடித்திருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்தில் அவர் நேர்த்தியாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு அவர் ரசிகர்களின் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் ரசிகர்கள் திரையரங்கை விட்டு வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் தங்களுடைய மனதில் சுமந்து செல்வார்கள். ” என்றார். 

 

இசையமைப்பாளரும், பாடகருமான ஷான் ரோல்டன் பேசுகையில்,“ குட்நைட் படத்தின் பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது. ‘லவ்வர்’ படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள். பின்னணி பாடகர்கள், பாடகிகள், நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜீ வி பிரகாஷ் குமார், புஷ்பவனம் குப்புசாமியின் வாரிசான நேகா அகர்வால், இசை கலைஞர்கள் உள்ளிட்ட என்னுடைய இசைக்குழுவினருக்கும், நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

நம் சமூகத்தில் பொதுவாக அறிவாளிகள் கஷ்டப்படுவார்கள். அறிவாளியாக பிறந்தாலே நம்மூரில் சிக்கல் தான்.சிந்திக்கிறான் என்றாலே அவனுடன் சேராதே என சொல்பவர்கள் தான் அதிகம். நிறைய யோசித்தால் நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்வீர்கள். இதுபோன்ற அறிவாளிகள் வெற்றிப் பெறவேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு. ஏனெனில் நல்ல சிந்தனையாளர்கள் வெற்றிப் பெற்றால் அந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். சிந்தனையாளர்களை வெற்றிப் பெற வைக்கும் துறையா.. இது? என்று கேட்டால்,. நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். . அதில் ஐம்பது சதவீதத்தினர் வெற்றி பெறுகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் பிரபுராம் வியாஸ் இன்னும் படங்களை இயக்கி, உயர்ந்த இடத்திற்கு முன்னேறுவார். அவர் நல்ல விசயங்கள் இயல்பாக போகிறபோக்கில் சொல்லக்கூடிய திறமைசாலி.  தயாரிப்பாளர் யுவராஜ் தமிழ் திரையுலகில் போராளி.  மற்றொரு தயாரிப்பாளரான மகேஷ் ராஜ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகன்.

 

ரசிகர்களாகிய நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நடுவில் நேரம் கிடைத்தால் இந்த படத்தை தயவு செய்து திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு இந்த படம் ஏதேனும் ஒரு விசயத்தை தரும்.” என்றார். 

 

Lover Audio Launch

 

நடிகர் மணிகண்டன் பேசுகையில்,“ சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் நினைத்த மாதிரி இந்த படத்தை உருவாக்கியதற்கு நிம்மதியாக இருக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் இந்த கதையை பிரபு சொன்னபோது அவரிடம், ‘நீங்கள் என்னை வைத்து இயக்காவிட்டாலும், வேறு யாரையாவது வைத்து இயக்குங்கள். ஏனெனில் இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை.’ என்றேன்.

 

இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பிரபுராம் வியாஸை பாராட்டுகிறேன். அதனையடுத்து தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். ஏனெனில் இந்த படத்தின் திரைக்கதையில் எந்த இடத்திலும் கமர்சியல் எலிமெண்ட் வேண்டும் என சொல்லாமல், கதையோட்டத்தின் இயல்பை ஏற்றுக்கொண்டு தயாரித்தனர். 

 

படபிடிப்புத்தளத்தில் நாயகி கௌரி ப்ரியாவின் மனோபலம் எங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. கண்ணா ரவி தற்போது தனி கதாநாயகனாக நடித்து வருகிறார். இருந்தாலும் இந்த படத்தில் இயக்குநர் சொன்னதற்காக நல்லதொரு கேரக்டரில் கொஞ்சம் கூட முகச்சுழிப்பு இல்லாமல் நடித்து முழு ஒத்துழைப்பை அளித்தார். இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஒரு வெற்றிப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்திலேயே நடித்தனர். 

 

நான் எப்போதும் ஒரு விசயத்தை மட்டும் உறுதியாக சொல்லிக்கொண்டேயிருப்பேன். அதேப்போல்  இப்போதும் சொல்கிறேன். ‘இந்த படம் உங்களை ஒருபோதும் டிஸ்ஸாப்பாயின்ட்மென்ட் பண்ணாது.” என்றார்.

 

தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் பஸ்லியான் பேசுகையில்,“ தேன்சுடரே..’ என்ற பாடல் வெளியானவுடன் நாயகன் மணிகண்டனுக்கு போன் செய்து, குறிப்பிட்ட குகை காட்சியில் எப்படி நடித்தீர்கள்? என கேட்டபோது, ‘அதற்கு அவர் வாழ்க்கையில் வெற்றியே கிடைக்காத ஒருவர் இருட்டில் நடந்து வரும் போது திடிரென்று ஒரு வெளிச்சம் வந்தால் எப்படியிருக்கும்? அதை மனதில் நினைத்துக கொண்டு தான் நடித்தேன்’ என எளிதாக விளக்கமளித்தார். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த படத்தை நானும் பார்த்துவிட்டேன். ஃபன்டாஸ்டிக் மூவி. படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருந்தார்கள். 

 

‘குட்நைட்’ படத்தின் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இயக்குநர் பிரபுராம் இப்படத்தின் கதையை சொன்னார். ஆனால் இது தொடர்பாக யுவராஜ் தான் முடிவெடுப்பார் என்று சொன்னேன். ஏனெனில் திரைத்துறையைப் பொறுத்தவரை எனக்கு யுவராஜ் தான் வழிகாட்டி. அவர் செய்யும் விசயங்கள் எனக்கு பல சமயங்களில் பிரமிப்பைத் தரும்.  குட்நைட் படத்தின் வெற்றிவிழாவில் மில்லியன் டாலர் ஸ்டூடியோசும், எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தரமான படங்கள் வழங்கும் என சொன்னேன். தற்போது ‘லவ்வர்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதுவும் தமிழ் ரசிகர்களுக்கான தரமான படம்.

 

2015 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் டிசைன் விசயமாக யுவராஜ் எனக்கு அறிமுகமானார்.  அதன் பிறகு அவருடன் பழகி வருகிறேன். தற்போது எங்களுடைய இரண்டாவது படம் வெளியாகும் சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ படமும் வெளியாகிறது.  இதுவே எங்களுக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறோம். இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற வேண்டும்.” என்றார். 

 

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,“ திரைத்துறையில் டிசைனிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தயாரிப்பாளராக திட்டமிட்டேன். அந்த தருணத்தில் பலரும் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது குறித்து எதிர்நிலையான கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருந்தனர். யாரும் எனக்கு ஆதரவாக பேசவேயில்லை. அப்போது சபரி எனும் நண்பர் உதவி செய்தார். அதன் பிறகு சக்திவேலன் எங்களைத் தொடர்பு கொண்டார். நல்ல கன்டெண்ட் இருந்தால்.. அதனை ஆதரிக்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

 

இந்த படத்தை கடந்த ஆகஸ்ட்டில் தான் தொடங்கினேன். அதற்குள் இந்த படத்தின் பணிகளை நிறைவு செய்து திரைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இதற்காக கடுமையான உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘லவ்வர்’ திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.