சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு குற்றச்சாட்டுகளை மறுத்த மாஜா நிறுவனம்!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், அறிவு வரிகளில், பாடகி தீ மற்றும் அறிவு இணைந்து பாடிய சுயாதீன பாடலான ”என்ஜாய் என்ஞாமி” மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியது. ஆனால், இப்பாடலின் வெற்றி பற்றி நேர்காணல்களில் பகிர்ந்துக்கொண்ட தகவல்களால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடலாசிரியர், பாடகர் அறிவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதற்கிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் அறிவு, ‘என்ஜாய் என்ஞாமி’ பாடலுக்காக தனக்கு ஒரு பைசா கூட வரவில்லை, என்று தெரிவித்தார். அதேபோல், இசையமப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ‘என்ஜாய் என்ஞாமி’ பாடலால் எனக்கு எந்தவித வருமானமும் இதுவரை கிடைக்கவில்லை, என்று தெரிவித்தார்.
இவர்கள் இருவரின் குற்றச்சாட்டால் இசையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ‘என்ஜாய் என்ஞாமி’ பாடலை வெளியிட்ட மாஜா நிறுவனம், இருவரின் குற்றச்சாட்டையும் மறுத்திருப்பதோடு, அதற்கான விளக்கமும் அளித்துள்ளது.
இது குறித்து மாஜா நிருவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நோயல் கீர்த்திராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுயாதீன இசையை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம். எங்களின் முதல் வெளியீட்டான ‘என்ஜாய் எஞாமின்’-யின் வெற்றி எமக்கும், இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதையிட்டு, இந்த சாதனையைப் படைத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பாடலின் வெற்றிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு இடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால் இந்த வெற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.
எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்களில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்திவைக்கும் செயல்களை செய்யவில்லை.
இருப்பினும், நாங்கள் நம்பியிருந்தது போல் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அதுதவிர, கலைஞர்களின் ஒப்பந்தக் கடமைகளின்படி, அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தாலும் அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச் செயல்பாடுகளால் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகாணும் முயற்சிகள் சிக்கல் நிலையிலுள்ளது.
இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, அவர்கள் சார்பாக கணிசமான செலவுகளையும் மாஜா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் நிலை நியாயமாகவும், விரைவாகவும் தீர்க்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துக்கொண்டுள்ளோம். சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, உரிய வழியில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.