சினிமாக்காரன் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என்று தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் மணிகண்டன், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார். தற்போது பல படங்களில் நடித்து வருபவர், சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதில், சான்வே மேக்னா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ‘ஜெய ஜெய ஜெய ஹே’ புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறுகையில், “இந்தப் படம் ஃபேமிலி காமெடி டிராமாவாக உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்மபித்த படத்தை இப்போது மார்ச் மாதம் முடித்திருக்கிறோம். இரண்டு ஷெட்யூலாக 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என லைவ்வாக நிறைய இடங்களில் படமாக்கினோம்.” என்றார்.
இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
பிரசன்னா பாலசந்தரன் மற்றும் ராஜேஷ்வர் காளிசாமி கதை எழுதியுள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை பிரசன்னா பாலசந்தரன் எழுதியிருக்கிறார். வைசாக் பாபுராஜ் இசையமைக்க, சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கண்ணன் பாலு படத்தொகுப்பு செய்கிறார்.