Dec 30, 2024 09:41 AM

இயக்குநர் பா.இரஞ்சித்தை பாராட்டிய நடிகர் விஜய் சேதுபதி!

இயக்குநர் பா.இரஞ்சித்தை பாராட்டிய நடிகர் விஜய் சேதுபதி!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி . மிகவும் பெருமையாக இருக்கிறது, கவனிக்கப்படாத கலைஞர்களை  கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குறிய விசயம். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும், என்னுடைய ஆதரவும் , பங்களிப்பும் எப்போதும் உண்டு. நீலம் பண்பாட்டு மையம் மற்றும் பா.இரஞ்சித் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.