Jun 06, 2022 04:55 AM

சிபி ராஜின் ஆசையை நிறைவேற்றிய ‘மாயோன்’

சிபி ராஜின் ஆசையை நிறைவேற்றிய ‘மாயோன்’

அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கத்தில் சிபி ராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாயோன்’. டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருப்பதோடு, படத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.

 

கடவுள் நம்பிக்கை மற்றும் அறிவியல் உண்மை ஆகியவற்றுடன் சிலை கடத்தலையும் மையமாக வைத்து உருவாகியுள்ள அட்வெஞ்சர் திரைப்படமான இப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் சிறப்பு டிரைலர் நேற்று வெளியிடப்பட்டதோடு, படத்தின் விளம்பரத்திற்காக படத்தில் இடம்பெறும் பிரம்மாண்ட விஷ்ணு சிலை உள்ள ரதம் ஒன்று தமிழகம் முழுவதும் 40 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளது. 

 

இந்த ரதத்தில், ‘மாயோன்’ படத்தின் விளம்பரங்களுடன் டிரைலரும் ஒளிபரப்பப்படும். படத்திற்கான விளம்பர யுக்தியாக இருந்தாலும், அதில் இருக்கும் விஷ்ணு சிலை பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த ரத யாத்திரை துவக்க நிகழ்ச்சி மற்றும் சிறப்பு டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிபி ராஜ், “'இண்டியானா ஜோன்ஸ்', 'டாவின்சி கோட்' படங்களெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது போன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது இந்தப்படத்தில் நிறைவேறியது. இளையராஜா இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும் .அதுவும் இந்தப்படத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இந்தப்படம் சாமி படமெல்லாம் இல்லை. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது. மேடையில் குட்டிக்கதை சொல்லலாம். ஆனால் இந்தப்படத்தின் கதையை சொல்ல முடியாது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

இவ்விழாவினில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசுகையில், “நான் இப்படத்தில் நடிப்பதாக எல்லாம் ப்ளான் இல்லை. ஆனால் படத்தின் போது ஒரு காட்சி தான் என சொல்லி என்னை நடிக்க வைத்து விட்டார்கள். எனக்குள் பல காலம் இருந்த கதை. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். சைக்கோ படத்தின் போது தான்  பார்வையற்றோருக்கு டிரெய்லர் செய்ய வேண்டும் என்ற ஐடியா முதலில் தோன்றியது. எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒரு சமூக அக்கறையாக இதை செய்தோம். சைக்கோ படத்தின் போது பார்வையற்றோருக்கு திரையிட்டபோது அவர்களின் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி என் மனதிற்கு மிகப்பெரும் சந்தோசத்தை தந்தது. அப்போது என் எல்லா படத்தையும் பார்வையற்றோர் ரசிக்கும்படி வெளியிட வேண்டும் என முடிவு செய்தோம். இப்படம் நீங்கள் எதிர்பார்க்காத புதிய அனுபவத்தை தரும்.” என்றார்.

 

நடிகர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், “நான் இந்தப்படத்தில் ஒரு நடிகன் தான். இது கடவுள் படம் என நினைத்து விட வேண்டாம். இதில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. இந்தப்படத்தில் படப்பிடிப்பில் ஒரு குகை மாதிரி இடத்திற்கு சென்றோம். அங்கு உள்ளே ஒரு கோயிலே அமைத்திருந்தார்கள். அந்த கலை இயக்கம் பார்த்து பிரமித்தேன். கலை இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.” என்றார்.

 

நாயகி தான்யா ரவிச்சந்திரன் பேசுகையில், “இந்தப்படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. சிபிராஜ் உடன் நடித்தது நல்ல அனுபவம். படத்தில் முழுதும் வருவது மாதிரி பெரிய ரோல்,  படத்தை கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார். 

 

Maayon

 

இயக்குநர் என்.கிஷோர் பேசுகையில், “இந்த திரைக்கதை மிக ஃபிரஷ்ஷாக இருந்தது. சிபிராஜ் எப்போதும் புதுமையான கதைகள் செய்பவர். அதனால் அவரிடம் சொன்னோம். அவருக்கு பிடித்திருந்தது. படத்தில்  கே எஸ் ரவிக்குமார், மாரிமுத்து, பக்ஸ் என ஒவ்வொருவருமே படத்திற்கு பொருத்தமாக அமைந்தார்கள். படத்தை நிறைய உழைப்பில் நிறைய பொருட்செலவில் உருவாக்கியுள்ளோம். இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக அருண்மொழி சார் தான் காரணம். அவர் படம் தான் முக்கியம் என புரிந்து கொண்டு படத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்தார் மேலும் ஓடிடி வாய்ப்பு இருந்தும் படத்தை திரையரங்கில் தான் கொண்டு வருவேன் எனும் அவரின் நம்பிக்கைக்கு நன்றி. கந்தர்வ இசை படத்திற்கு தேவைப்பட்டது. எங்களுக்கு இளையராஜாதான் ஒரே வாய்ப்பாக தோன்றினார் . அவரை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. இப்படத்தின் கதை இந்தியா முழுக்க எளிதாக புரிந்து உணர்ந்துகொள்ள கூடிய கதையாக இப்படம் இருக்கும்.” என்றார். 

 

கலை இயக்குநர் பாலா பேசுகையில், “இந்த மாதிரி திரைக்கதை தமிழில் அதிகம் வந்ததில்லை. இந்தப்படத்திற்காக நிறைய இடங்களுக்கு ஆராய்ச்சிக்காக சென்று தகவல்கள் சேகரித்து இப்படத்தின் காட்சிகளை அமைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.” என்றார். 

 

நடிகர் மாரிமுத்து பேசுகையில், “இயக்குனர் 15 நிமிடத்தில் திரில் நிறைந்த இந்த கதையை என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் சார் உடன் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இதுவரை நாம் பயணப்படாத ஒரு பாதையில் பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கும் இந்த படம். இந்த பூமியில் என்ன இருக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. அதனால் இந்த மாதிரி கதை எழுத பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த படம் விரைவில் தியேட்டருக்கு வரவிருக்கிறது. படம் பார்த்து நீங்கள் வரவேற்பு தர வேண்டும் நன்றி.” என்றார்.