Oct 18, 2017 02:41 AM

'மெர்சல்’ விமர்சனம் - எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்!

'மெர்சல்’ விமர்சனம் - எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்!

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜயின் ’மெர்சல்’ பல தடைகலை தாண்டி, இன்று உலகம் முழுவதும் சுமார் 3500 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், ‘மெர்சல்’ படத்திற்கு நெகடிவாக விமர்சனம் செய்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும், என்று தன்னை விஜய் ரசிகர்கள் மிரட்டியுள்ளதாக, பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியுள்ளார்.

 

முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை விமர்சனம் செய்வதை காட்டிலும், அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளது. ஒரு நடிகை அப்படி கடுமையாக விமர்சித்தால், அவரது போட்டி நடிகர் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதால், ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களின் படங்களையும் அதிகாலையிலேயே பார்த்துவிட்டு சமூக ஊடகத்தில் விமர்சனம் சொல்பவர்கள், திரைப்பட விமர்சன கலாச்சாரத்தையே மீறி விமர்சனம் செய்து வருகிறார்கள். இது திரைத்துறைக்கு பெரும் மன கஷ்ட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த நிலையில், சமீபகாலமாக யுடியூபில் திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து வரும் எழுத்தாளர் சாரு நிவேதிதா, தன்னை விஜய் ரசிகர்கள் மிரட்டியதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அவருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், “sir if u give any negative reviews about vijay starrer mersal movie…U WILL FACE SOME SERIOUS *****. i know ur home address…where u going walking for daily…

so please stay away from such incidents….” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதாம்.

 

இது குறித்து தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள சாரு நிவேதிதா, “இந்தக் கடிதம் எழுதியவரை சைபர் க்ரைம் மூலம் கண்டு பிடித்து விடலாம். ஆனால் மெர்சல் விமர்சனம் எழுதினால் இன்னும் பெரிய மிரட்டல் எல்லாம் வரும். கொலை கூட செய்வார்கள். விஜய் ரசிகர்களே, உங்களால் எனக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் விஜய்க்குத்தான் தீராப் பழி ஏற்படும். தன்னுடைய ரசிகர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல் வளர்த்து வைத்திருக்கிறார் விஜய். இந்த மிரட்டலுக்கு விஜய் பதில் சொல்ல வேண்டும்.

 

மேலும், எந்த விஜய் ரசிகராலும் என் உயிர் போனாலோ நான் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டாலோ அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்பட மாட்டேன். எனக்கு மரணம் உங்கள் மூலம் தான் வரும் என்றால் வரட்டும். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்.

 

நான் பயப்படுவது என் கடவுளுக்கு மட்டும்தான். என் உயிருக்கு பயந்து மெர்சலைப் பற்றி விமர்சிக்காமல் இருந்தால் ஒரு தும்மல் வந்து கூட சாவேன்.சாவுக்குப் பயந்தவனா எழுத்தாளன்? என் வீட்டுக்கு வா தம்பி.நான் தினந்தோறும் போகும் நாகேஸ்வர ராவ் பார்க்குக்கும் வா.நாட்டில் போலீஸ் இருக்கிறது; கோர்ட் இருக்கிறது; கடவுளும் இருக்கிறார்.

 

ஒளிந்து கொண்டு எனக்கு மிரட்டல் விடும் விஜய் ரசிகரே, உங்கள் உண்மைப் பெயரையும் உங்கள் விலாசத்தையும் தருவீரா? தராவிட்டாலும் பரவாயில்லை, சைபர் க்ரைமில் கண்டு பிடித்து விடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.