சமூக பிரச்சினைப் பற்றி பேசும் ‘மெர்சல்’! - சென்சாரில் கசிந்த தகவல்!
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக பிரச்சினைகள் பல உருவானாலும், அதற்கு ஏற்றவாறு படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
படம் வெளியாக இன்னும் 3 மூன்றே நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் கதை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வெளியாகியது.
இந்த நிலையில், மெர்சல் படத்தின் முக்கிய கதை கரு பற்றிய தகவல் சென்சார் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இது இந்திய சென்சார் குழு வெளியிடவில்லை. இங்கிலாந்து அரசு சென்சார் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள ‘மெர்சல்’ படத்தை வெளிநாட்டுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தணிக்கைப் பணிகளில் இங்கிலாந்து தணிக்கை குழுவினர் சமீபத்தில் படத்தை பார்த்துள்ளார்கள்.
எப்போதுமே ஒரு படத்தின் தணிக்கைப் பணிகள் முடிந்தவுடன், அவர்களுடைய இணையத்தில் அப்படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிடுவார்கள். அதன்படி 'மெர்சல்' படம் குறித்து இங்கிலாந்து தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள தகவலில், “தமிழ் த்ரில்லர் படம். ஒரு மேஜிக் செய்பவரும், டாக்டரும் இணைந்து இந்திய மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை வெளிக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். மிதமான வன்முறை உள்ள படம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.