டிஜிட்டலில் உருவாகியிருக்கும் எம்.ஜி.ஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு
எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்து 1974 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சிரித்து வாழ வேண்டும்’. எஸ்.எஸ்.பாலன் இயக்கிய இப்படத்தில் லதா கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் எம்.என்.நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், எல்.காஞ்சனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வாலி, புலமைப்பித்தன் ஆகியோரது வரிகளில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
”உலகம் என்னும்..” என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத எம்ஜிஆருக்காக ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் ஆகிய இரு பாட கர்கள் பாடியிருந்தார்கள். மேலும், ”எண்ணத்தில் நலமிருந்தால்..” மற்றும் ”ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்” ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இன்னொரு பாடல் ”பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ” என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இதயம் பேசுகிறது’ மணியன், வித்வான் வே.லட்சுமணனுடன் இணைந்து உதயம் புரோடக்ஷனஸ் சார்பில் தயாரிப்பில், எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை 46 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கான பணிகளை தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் கவனித்து வரும் நிலையில், இதன் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில், ‘சிரித்து வாழ வேண்டும்’ டிஜிட்டல் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாளான ஜனவரி 17 ஆம் தேதி ‘சிரித்து வாழ வேண்டும்’ டிஜிட்டல் பதிப்பு தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.