மதுரையில் நடந்த திடீர் ஆலோசனை - ரஜினியை சந்திக்கும் மு.க.அழகிரி?
நடிகர் கமல்ஹாசன் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்ததோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சிறிய பந்தல் போட்டு உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் இறங்கிவிட்டார். அவ்வபோது மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
அதே சமயம், ரஜினிகாந்தும் மாவட்டம் ரீதியாக தனது கட்சிக்கு நிர்வாகிகளை சேர்க்கும் பணியை முடக்கிவிட்டுள்ள நிலையில், விரைவில் தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, விரைவில் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கடந்த 22 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்கள் மதுரை முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் எம்.எல்.ஏ ஹவுஸ் பாட்சா உள்ளிட்டவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர், சென்னைக்கு போகும் போது ரஜினிகாந்தை சந்தித்து, அவரது அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துதெரிவிக்க போவதாக கூறினாராம்.
ரஜினிகாந்தும், மு.க.அழகிரியும் இதற்கு முன்பாக பல முறை சந்தித்திருந்தாலும், தற்போது நடைபெற உள்ள சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.