ஏழைகளுக்கு உணவு வழங்கி வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ்!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதே சமயம், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருப்பதோடு, கூலி தொழிலாளர்கள் மற்றும் சாலைகளில் வாழ்பவர்கள் போதிய உணவின்றி தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், உணவின்றி தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வெளியூரில் இருந்து சென்னையில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு இலவசமாக மூன்று வேலை உணவு வழங்கி வருகிறார்.
இசைத்துறையில் பல வருட அனுபவம் பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், டிஸ்கவர் ஸ்டுடியோ பிலிம் கம்பெனி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரிக்கும் திட்டத்தில் இருப்பவர், முதலாவதாக யோகி பாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரது நடிப்பில், பிரபல இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து வருகிறார்.
திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும், பல்வேறு சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், தனது டிஸ்கவர் ஸ்டுடியோ பிலிம் கம்பெனி மற்றும் குழுவினருடன் இணைந்து, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினமும் மூன்று வேலை இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
சுமார் 15 நாட்களுக்கு மேலாக இப்பணியை மேற்கொண்டு வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், இன்று பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன் முன்னிலையில், சென்னை கோயம்பேடில் உள்ள கூலி தொழிலாளர்கள் மற்றும் சாலைகளில் வாழ்பவர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.