Jun 25, 2024 03:26 AM

"என் படங்களில் சமூகத்திற்கான நல்ல விசயங்கள் மட்டுமே இருக்கும்" - ‘சூரியனும் சூரியகாந்தியும்’ இயக்குநர் ஏ.எல்.ராஜா

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் ஏ.எல்.ராஜா தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் சூரியனும் சூரியகாந்தியும்’. இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். 

 

ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா.

 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் சந்தான பாரதி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ராசி அழகப்பன், ஆர்.சுந்தர்ராஜன், எழில், தயாரிப்பாளர்கள் செளந்தர ராஜன், விஜயமுரளி, மங்களநாத குருக்கள் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.எல்.ராஜா, “இந்த படம் சமூக நீதி பேசும் படமாக இருக்கும். இன்று ஒவ்வொருவரும் தங்களது சாதிகளை உயர்வாக பேசும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், அந்த சாதியே வேண்டாம் என்று சொல்வது தான் இந்த படம். நான் பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரை பின்பற்றி வந்திருக்கிறேன், அதனால் என் படங்களின் அதன் தாக்கம் இருக்கும். இந்த படத்திலும் சமூகத்திற்கான நல்ல விசயங்கள் பற்றி தான் பேசியிருக்கிறேன். இன்று ஒரு படம் தயாரிப்பது எவ்வளவு கஷ்ட்டம் என்பது உங்களுக்கு தெரியும், ஆனால் அந்த படத்தை வெளியிடுவது அதை விட மிகப்பெரிய கஷ்ட்டம், அதனால் இதற்கான ஒரு கட்டமைப்பு வேண்டும். எனக்கு பல்வேறு நிலையில் பலர் உதவி செய்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “சாதி இல்லை என்று படம் சொல்கிறது, என்பது பாடல் காட்சிகளிலேயே தெரிந்துய் விட்டது. சாதி வேண்டாம்...என்ற பாடல் சிறப்பாக இருந்தது. சாதி இல்லையடி பாப்பா, என்று பாரதி எழுதினதை நாம் படித்திருக்கிறோம், மனப்பாடம் செய்து தேர்வில் எழுதி மதிப்பெண்ணும் பெற்றுவிடுவோம். அதற்காக தான் பாரதி எழுதியது போல் தான் இருக்கும். அதை தாண்டி எதையும் நாம் சிந்திக்க மாட்டோம். நமக்கு அதற்கான நேரம் கிடையாது. வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஓடிக்கொண்டிருப்போம். எப்போதாவது நேரம் கிடைத்தால் அப்போது தான் சமூகத்தை பற்றி சிந்திப்போம். இன்று அதுபோல தான் நேரம் கிடைக்கும் போது சமூகத்தை பற்றியும், மக்களை பற்றியும் சிந்திப்பவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்,  தலைவராகி விடுகிறார்கள். இப்படி நேரம் கிடைக்கும் போது சமூகத்தை பற்றி சிந்திக்காமல் எப்போதும் சமூகத்தை பற்றி சிந்திப்பவராகவும், அதை தனது படங்களில் சொல்பவராகவும் ஏ.எல்.ராஜா இருக்கிறார், அவருக்கு இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றியை கொடுக்கும்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “மங்களநாத குருக்கள் சுமார் 1000 படங்களுக்கு மேல் திரைப்பட பூஜைகளை நடத்தியிருப்பார். சம்மந்தப்பட்ட இயக்குநர், தயாரிப்பாளர் நன்றாக வர வேண்டும் என்று வாழ்த்துவார், இன்று அவரது மகன் ஸ்ரீஹரி நாயகனாக நடிக்கிறார், அவரை வாழ்த்து இங்கு பலர் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தின் பாடல்களை பார்க்கும் போது சாதி பற்றி படம் பேசுவது தெரிகிறது. அதேபோல் இயக்குநர் ஏ.எல்.ராஜா திராவிட சிந்தனை உள்ளவர் என்று சொன்னார்கள், அவர் மனித சிந்தனை உடையவர் அதனால் தான் மங்களநாத் குருக்கள் மகனை நாயகனாக்கியிருக்கிறார். இன்று சாதி கட்சி, சாதி அமைப்பு நடத்துபவர்கள் பெரியாரை பயன்படுத்துகிறார்கள். ஆனால், பெரியார் காலத்தில் சாதி இருந்தது, சாதி அமைப்பு, சாதி சங்கங்கள், சாதி கட்சிகள் இல்லை. இன்று அனை அனைத்தும் அதிகரித்திருக்கிறது. அவர்கள் பெரியாரை தங்களது லாபத்திற்காக பயன்படுத்துகிறார்களே தவிர, பெரியாரின் கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை. இயக்குநர் ஏ.எல்.ராஜா, மனிதாபிமானம் உள்ளவர், நல்ல குனம் படைத்தவர், அவர் குனத்திற்காக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

 

நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், “’சூரியனும் சூரியகாந்தியும்’, இங்கு சூரியன் நாட்பதில் வெற்றி பெற்று விட்டது. அங்கு காந்தி வரவில்லை, அதாவது ராகுல் காந்தியால் பிரதமர் ஆக முடியவில்லை. பிறகு எதற்கு தான் இந்த தேர்தல் நடந்தது? தேர்தல் என்றால் ஒரு மாற்றம் வர வேண்டும், ஆனால் மீண்டும் மோடி பிரதமரானது ஏமாற்று வேலை தான். தேர்தல் எந்திரம் பற்றி இப்போ வெள்ளக்காரன் சொல்கிறார். வெள்ளையா இருப்பவர் பொய் சொல்ல மாட்டார், என்று சொல்வது போல் எலான் மஸ்க் சொல்வது பொய்யாக இருக்கிறது. அவர் ஓட்டி எந்திரத்தில் மோசடி செய்யலாம், என்று சொல்கிறார். நான் இதை பல வருடங்களாக சொல்லி வருகிறேன், ஆனால் யாரும் கேட்பதில்லை.

 

இன்றைக்கு எதுவுமே சரியில்லை. சினிமாவில் சின்ன படங்களுக்கு என்று யாரும் எந்த உதவியும் செய்வதில்லை. 200 கோடி, 400 கோடியில் படம் எடுப்பவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சரக்கு என்ற ஒரு படத்தை எடுத்து ரொம்பவே கஷ்ட்டப்பட்டு விட்டேன். சிறிய படங்களுக்கு என்று சிறிய விலையில் டிக்கெட் விற்க வேண்டும். அதேபோல், மக்கள் படம் பார்க்கும் காட்சியில் சிறு படங்களுக்கு காட்சி ஒதுக்க வேண்டும். இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

 

“சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்” -என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதை தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை சொல்கிறது.

 

படத்தின் பாடல்களும், டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.