’நட்சத்திரம் நகர்கிறது’ ஹாலிவுட் படம் போல் இருக்கிறது - பிரபலங்கள் பாராட்டு
’சார்பேட்டா பரம்பரை’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது.’. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்வதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை பேசும் படமாக உருவாகியுள்ளது.
காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தென்மா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி, வெற்றிமாறன், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, கே.இ.ஞானவேல்ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “2007 காலகட்டத்திலிருந்து ரஞ்சித்தை தெரியும். ஒரு டாக்குமெண்ட்ரிக்கு ஸ்டோரிபோர்ட் செய்யத்தான் வந்தார். நான் படம் செய்த போது நானே அவரை அழைத்தேன். அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்து விட சொன்னார். பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார். ரஞ்சித் படங்களை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள் இத்தனை விசயங்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார். அவரது ஒவ்வொரு படமும் ஆச்சர்யம் தரும். இந்தப்பட டிரெய்லரே மிரட்டிவிட்டது. ஹாலிவுட் படம் போல் உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் சசி பேசுகையில், “சிலர் பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் செயல்கள் கோழைத்தனமாக இருக்கும். ஆனால் அப்படியானவரில்லை ரஞ்சித், துணிச்சலாக எல்லாவற்றையும் செய்வார். இந்த தலைப்பே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு புத்தக தலைப்பை எப்படி தைரியமாக வைக்கிறார் என ஆச்சர்யமாக இருந்தது. யாழி பிலிம்ஸ் அவரை சுதந்திரமாக படமெடுக்க விட்டதற்கு நன்றி. ரஞ்சித் படம் எல்லாவற்றையும் பார்த்தவுடன் என் கருத்தை சொல்லிவிடுவேன். இந்தப்பட கதாப்பாத்திர அறிமுக டிரெய்லரே வித்தியாசமாக இருந்தது, அது படம் உடனே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இந்தப்படம் ரஞ்சித் படங்களில் முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “'அட்டகத்தி' பார்த்த போது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக தெரிந்தது. அதே போல் தான் இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போதும் இருந்தது. உறவுகள் பற்றி நாம் பேச தயங்குகிற விசயத்தை, தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும். ரஞ்சித் மீண்டும் புது டிரெண்டை உருவாக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா பேசுகையில், “'அட்டகத்தி' துவக்கத்துக்கு வெங்கட் பிரபு தான் காரணம். அவர் தான் என் அஸிஸ்டெண்ட் படம் பண்ணிருக்கார் வாங்கன்னு கூட்டிப்போனார். படம் பிடித்தது. அதை விட ரஞ்சித் பிடித்துப்போனார். அவரோடு அப்போது துவங்கிய பயணம், மெட்ராஸ் இப்போது விக்ரம் வைத்து படம் பண்ணுவது வரை தொடர்கிறது. ஒரு மனிதனாக ரஞ்சித் பல திறமையாளர்களை வளர்த்துவிட்டுள்ளார். அவர் செய்வதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. புக் வெளியிடுகிறார், கேஸ்ட்லெஸ் கலக்டிவ் நடத்தி வருகிறார். தான் கொண்ட கொள்கையில் சிறிதும் தடம் மாறாமல் பயணித்து வருகிறார். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமையாக இருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்றார்.
கலைப்புலி தாணு பேசுகையில், “ரஞ்சித் தனக்கு இருக்கும் நட்புக்களை ஒன்று சேர்த்து பயணிப்பவர். கபாலியில் பயணிக்கும் போது அவரது எண்ணங்களை பகிர்ந்துகொள்வார். அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன். பரியேறும் பெருமாள் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத போது அவருக்கு தெரியாமலேயே தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்தேன். அவரது பாணியில் இருந்து விலகி, ஹைஃபையாக நட்சத்திரம் நகர்கிறது செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த படைப்பு அடித்தட்டு மக்களின் கதையை சொல்லும். தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், “'ஜெய்பீம்' இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது. நான் யாரையும் வளர்த்து விட வில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.
வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. சசி சார் நான் உதவியாளனாக இருந்த போது என்னை கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியாளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அது தான் காரணம். வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர். இந்த மூன்று பேரும் இங்கிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம் கபாலி செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை, எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை. மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அவர் தான் கூப்பிட்டு படத்தின் கலக்சன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.
யாழி புரொடக்ஷன் மனோஜ் மற்றும் விக்னேஷ் சினிமாவை சரியாக புரிந்து கொண்டவர்கள், அவர்கள் இன்னும் பெரிய சினிமாக்கள் எடுப்பார்கள் என நம்புகிறேன். இப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் மிக திறமையானவர்கள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும் என்னை புரிந்துகொண்டு எனக்காக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. என் குடும்பம், மிளிரன், மகிழினி என்னை தொந்தரவு செய்யாமல் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் அம்மா 15 வருடம் முன் "பார்த்து போயா ஜெயிச்சுட்டு வா" என்று அனுப்பினார் .இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஜெயிச்சுட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. காதல் சமூகத்தில் அத்தனை எளிதில்லை, அதை இந்தப்படம் பேசும்.” என்றார்.
இசையமைப்பாளர் தென்மா பேசுகையில், “சுயாதீன இசையமைப்பில் 15 வருடங்களாக இருக்கேன். ரஞ்சித் சார் சந்தித்த பிறகு வாழ்க்கை மாறிவிட்டது. இது எனது நாலாவது படம் ஆனால் ரஞ்சித் சார் எனக்கு பெரிய அறிமுகம் கொடுத்து விட்டார். அவர் நிறைய பேருக்கு அறிமுகம் தந்துள்ளார். பாடகர் அறிவு மெயின் ஸ்ட்ரீமில் கொண்டாடப்படுவது அவரால் தான். என் இசையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அது எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் ரஞ்சித் சார் தான் ஊக்கப்படுத்தினார். நிறைய புதுமுகங்கள் இதில் உழைத்துள்ளார்கள்.” என்றார்.
யாழி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் மனோஜ் பேசுகையில், “குதிரைவால் படத்திற்கு கோ புரடியூசர் தேடும்போது தான் ரஞ்சித் உடன் நெருங்கி பழகினோம். அவர் செய்து வரும் விசயங்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. யாழி ஃபிலிம்ஸில் இந்தப்படத்தை செய்யலாம் என்ற போது யாழி ஃபிலிம்ஸ்க்கு இந்தப்படம் சரியாக இருக்குமென்று நினைத்தோம். இந்தப்படம் கதையாகவே நிறைய ஆச்சர்யங்கள் இருந்தது, படமும் நன்றாக வந்துள்ளது. நீலம் புரடக்சன்ஸ் பெரிய உதவியாக இருந்தது. அடுத்து பொம்மை நாயகி படமும் நீலமுடன் இணைந்து செய்து வருகிறோம். இன்னும் நிறைய படைப்புகள் திட்டமிட்டிருக்கிறோம். இந்தப்படத்தின் வரவேற்பை பார்க்க ஆவலுடன் உள்ளோம்.” என்றார்.