’நாதமுனி’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்! - இளையராஜாவின் பாராட்டால் படக்குழு உற்சாகம்

இயக்குநர் மாதவன் லக்ஷ்மன் இயக்கத்தில், 369 சினிமா தயாரிப்பில், இந்திரஜித் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா தத்தா நாயகியாகவும் நடிக்கும் படம் ‘நாதமுனி’. இதில், அந்தோணி தாசன், ஜான் விஜய், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சகமனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில் வினைபுரிகிறது என்பதை கருத்தாழத்தோடு சொல்வது தான் ‘நாதமுனி’ படத்தின் கதை என்கிறார் இயக்குநர் மாதவன் லக்ஷ்மன்.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இயக்குநர் மாதவன் லக்ஷ்மன் கதை சொன்ன உடனே பிடித்துவிட்டது என்று சொன்னாராம். மேலும், பத்தின் கருவும், அதன் நோக்கமும் அவரை வெகுவாக கவர்ந்ததால், படத்தின் பாடல்களை அவரே எழுதிவிட்டாராம். அவரது சகோதரர் கங்கை அமரனும் சில பாடல்களை எழுதியுள்ளார்.
படத்திற்கு இசையமைத்து பாடல்கள் எழுதியிருக்கும் இளையராஜா, ‘நாதமுனி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாராட்டவும் செய்திருக்கிறார்.
இளையராஜாவின் பாராட்டினால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது.