இயல்பான நடிப்பு, தனித்துவமான நகைச்சுவை உணர்வு! - படத்துக்கு படம் கவனம் ஈர்க்கும் கருணாகரன்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானாலும், அனைத்து வேடங்களிலும் கன கச்சிதமாக பொருந்தி தொடர்ந்து பலவிதமான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அப்படிப்பட்ட நடிகராக தற்போது கோலிவுட்டில் வலம் வருபவர் கருணாகரன்.
நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என எந்த வேடமாக இருந்தாலும் இயல்பான நடிப்பு மூலம் அந்த வேடத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கருணாகரன் கெட்டிக்காரர். அதனால் தான், நகைச்சுவை வேடங்களில் அவர் நடித்தாலும், அவருடைய தனித்துவமான நகைச்சுவை உணர்வும், அதை இயல்பாக கொடுக்கும் விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிகுமார் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘அயலான்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் கருணாகரன், நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில், ’96’ பட புகழ் பிரேம்குமார் இயக்கும் புதிய படம், நளன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்கும் படம், மிர்ச்சி சிவாவுடன் ‘சூது கவ்வும் 2’ உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும், அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘குற்றச்சாட்டு’ படம் விரைவில் வெளியாக இருப்பதோடு, நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
கை நிறைய படம் இருந்தாலும் தான் நடிக்கும் ஒவ்வொரு வேடமும் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக தனி கவனம் செலுத்தி வரும் நடிகர் கருணாகரன், ’அயலான்’ படத்தில் நட்சத்திரங்களுடன், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒவ்வொரு காட்சிக்காகவும் சிறந்த உழைப்பைக் கொடுத்திருப்பதாகவும், இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விசயம் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தது குறித்து கூறிய கருணாகரன், ”சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்களுடனும் கலந்தாலோசித்து சிறப்பான அவுட்புட்டைக் கொண்டு வருவார் சிவா. அதேபோல, இயக்குநர் ரவிகுமாரும் சிறந்த தொழில்நுட்பக்குழுவையும் புதிய ஐடியாவையும் இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவிகுமார் இருவரும் படத்தின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான் எங்கள் பலம். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும். ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு படமாகவும், குறிப்பாக குழந்தைகளுக்கான படமாக ’அயலான்’ வந்துள்ளது.” என்றார்.
வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது போல், நடிப்பிலும் வித்தியாசத்தைக் காட்டி ரசிகர்களிடம் மட்டும் இன்றி விமர்சகர்களிடமும் பாராட்டு பெற்று வரும் கருணாகரன், நடித்திருக்கும் ‘அயலான்’ படத்தை தொடர்ந்து பல பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதோடு, அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘குற்றச்சாட்டு’ படம் வெளியான பிறகு நடிப்பில் மட்டும் இன்றி நட்சத்திரமாகவும் வேறு ஒரு பரிணாமத்தை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.