சர்ச்சை இயக்குநர் படத்தில் ஒப்பந்தமான நயந்தாரா!
நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கும் நயந்தாரா, தனது சம்பளத்தை ரூ.3 கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பள உயர்வு, கண்டிஷன் போடுவது என்று இருந்தாலும், நயந்தாரா தான் வேண்டும் என்று பல ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் விரும்புகிறார்கள்.
இதற்கிடையே, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கும் நயந்தாரா, குறும்படத்தின் மூலம் சர்ச்சையை கிளப்பிய இயக்குநரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘லட்சுமி’ என்ற குறும்படம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியின் செயலை நியாயப்படுத்துவது போல இந்த குறும்படம் இருந்ததால், இந்த குறும்படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் ஆதரவு தெரிவித்தாலும், இந்த குறும்படம் குறித்து பல தளங்களில் விவாதம் நடைபெற்றது.
இந்த குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் என்பவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். லட்சுமி குறும்படத்திற்குப் பிறகு இவர் இயக்கிய ‘மா’ என்ற குறும்படம் அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ளது. ஆனால், இந்த குறும்படம் வெளிநாட்டு திரைப்படம் ஒன்றின் தழுவல் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திரைப்படம் ஒன்றை இயக்க உள்ள சர்ஜுன், அதில் ஹீரோயினாக நயந்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
'அறம்', 'குலேபாகவலி' ஆகிய படங்களைத் தயாரித்த கே ஜி ஆர் ஸ்டூடியோ தங்களது மூன்றாவது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க 'லட்சுமி', 'மா' குறும்படங்களை எடுத்த சர்ஜுன் இயக்க உள்ளார்.
அதற்கான அறிவிப்பை தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. நயன்தாரா நடிக்கும் இப்படம் திகில் கலந்து ஒரு பேய்ப்படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, திரைக்கதை உருவாக்கும் பணிகள் மும்முரமாய் நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இயக்குநர் சர்ஜுன் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தை சத்யராஜை வைத்து இயக்கியுள்ளார். இப்படம் மிகவிரைவில் வெளிவரவுள்ளது.