ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் பனை மரங்களுக்காகவும் போராட சொல்லும் ‘நெடுமி’!
சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள் தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானர் உள்ளனர். குறிப்பாக கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் லட்சக்கணக்கானவை.
ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அந்தக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நின்றன. அவர்களின் வலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிருந்த அந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் ஒரு பிரதிநிதியாக ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்வியலைப் பேசும் படம் தான் ’நெடுமி’.
எப்படிக் காளைகளைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு இயக்கமாக வடிவெடுத்ததோ அதுபோல் நமது ஆதி பண்பாட்டின் தொடர்ச்சியாக நம் கண் முன் உயிர் சாட்சியாக நிற்கும் பனை மரங்களைக் காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டியது கடமையாகிறது. ஊருக்கு ஊர் எல்லை காத்தான்களாக நின்று கொண்டு கற்பக விருட்சம் போலப் பலனைத்தரும் பனைமரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கருத்தைச் சொல்லாமல் சொல்லி வலியுறுத்துகிறது இந்தப் படம்.
இப்படத்தை நந்தா லக்ஷ்மன் எழுதியுள்ளார். ஏற்கெனவே இசை ஆல்பங்கள், குறும்படங்கள் என்று இயக்கிய இவர், திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் பார்த்த படங்களிலிருந்தே பாடங்களை எடுத்துக்கொண்டு திரைநுட்பம் கற்றிருக்கிறார்.
கண் முன் கண்ட கதையையும் வாழ்வியலையும் மனதில் பதியம் போட்டு வைத்து இருந்ததைத் திரைநுட்பம் கலந்து ’நெடுமி’ படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தை ஹரிஷ்வர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் எம். வேல்முருகன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் நாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார். நாயகியாக அபிநயா நடித்துள்ளார். இருவருமே அந்தக் கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்துள்ளார்கள். இவர்களுடன்இயக்குநர் ஏ.ஆர்.ராஜேஷ் முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்கள் தவிர பிரீத்தி ரமேஷ், வாசு, கிசோர் மணி, குழந்தை நட்சத்திரங்கள் சரத்ராஜ், ராம்கி, நடித்துள்ளனர். உதவி இயக்குநர் தினேஷ் டேவிட், முரளிதரன் வெங்கடேசன் ஆகியோரும் நடித்துள்ளனர். குட்டிப் புலி படத்தில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.
வாழ்க்கையில் புயலடித்த பாதிப்பின் சாட்சிகளாக நிற்கும் மக்களின் வாழ்க்கையில் இருந்து ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்து கொண்டு படமாக்குவது என்று முடிவு செய்தபோது பெரிய பெரிய நடிகர்களை தேடிச் செல்லவில்லை. பிரமாண்டங்களைத் தேடிப் போகவில்லை. இயல்பான கதையைப் பதிவு செய்வது என்கிற நோக்கத்தில் நல்லதொரு தயாரிப்பாளர் தேடிய போது இந்தக் கதை பிடித்து போய் இயக்குநரின் நண்பரின் மாமாவான வேல்முருகன் படத்தைத் தயாரிக்க முன் வந்துள்ளார். அளவான பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி உள்ளது.
கொரோனா காலத்தில் கதை உருவாக்கி மெருகேற்றி 28 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் தான் இயக்குநர் நந்தா லக்ஷ்மன். அந்த ஊருக்கு அருகில் உள்ள புதுப்பாக்கம் என்கிற கிராமம் கதைக்குப் பொருத்தமாக அமையவே முழு படத்தையும் அங்கேயே முடித்துள்ளார்கள்.
மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்களது வலிகள் என்ன? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் வகையில் இந்தக் கதை உருவாகியுள்ளது.
ஜாஸ் ஜே. பி.விஷ்வா இசையமைத்துள்ள இப்பட்த்திற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் மற்றும் ஒப்பனை உடைகள் போன்றவற்றை டி.வி. வசந்தன் கவனித்துள்ளார். உதவி இயக்குநர்களாக இயக்குநருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றி உள்ளார்கள் ஏ.ஆர். ராஜேஷ், தினேஷ் டேவிட், முரளிதரன் வெங்கடேசன் ஆகியோர். ராம்.சரவணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
படம் பற்றிய இயக்குநர் நந்தா லக்ஷ்மன் கூறுகையில், “பனை மரங்களைச் சார்ந்து வாழ்க்கை நடத்திய 10 லட்சம் குடும்பங்கள் இன்று மிகவும் சிரமத்துக்குள்ளாகி சொல்ல முடியாத சோகத்தை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அரசின் கள் இறக்கத் தடை சட்டத்தால் இவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட வலி அவர்களுக்குள் மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வலியைத் திரைப்படத்தில் பதிவு செய்யும் முயற்சி தான் இது.சொல்லத் தயங்கி சொல்ல மறந்த அந்த வலியை நான் ஒரு படமாக எடுத்துள்ளேன். திருப்தியாக வந்துள்ளதாக நம்புகிறேன்.
இந்தப் படத்தைப் பத்து முறை நாங்கள் நண்பர்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம். படத்தைப் பற்றி பலரும் விமர்சித்தாலும் பல்வேறு கருத்துக்கள் சொன்னாலும் 80% பேர் படத்தில் ஓர் உயிரோட்டம் உள்ளது என்று பாராட்டினார்கள். அந்தப் பாராட்டு தான் எங்களை முன்னகர்த்திக்கொண்டு செல்லும் சக்தியாக இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருக்கலாம், இன்னும் செலவு செய்து பிரமாண்டமாக எடுத்திருக்கலாம் என்று பலரும் பலவிதமாகச் சொன்னாலும், அந்த உயிரோட்டம் இருப்பதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். இதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை அளித்தது.ஒரு திரைப்படத்திற்கு தேவையானது அந்த நம்பிக்கைதானே?
சினிமா பற்றிய கனவுகளுடன் இருக்கும் பல இளைஞர்கள் கரம் கோர்த்து ஒரு குழு முயற்சியாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதில் தனிநபர் யாரும் உரிமை கொண்டாடாத அளவிற்கு கூட்டாக, குழுவாக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம் அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.
ஆக்ஷன் ரியாக்சன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார். வெளியீட்டு தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.