தமிழ் சினிமாவில் புதிய முயற்சி!
தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் வருகை அதிகரித்தாலும், பெண் படைப்பாளிகள் என்று பார்த்தால் விரல் விட்டு என்ணும் அளவு தான் இருப்பார்கள். அதேபோல், பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் என்றால் மிகவும் அரிதான ஒன்றாக இருப்பார்கள். அப்படி இருந்தாலும், அவர்களுக்கு சரியான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.
இத்தகைய ஒரு சூழலை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர் ஒருவர், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை, இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைத்திலும் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்.
ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக பெண் இயக்குநர் பாக்யா இயக்கும் இப்படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரணி இசையமைக்கிறார். சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணியாற்றிய சின்னு குருவில்லா என்ற பெண் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
‘வண்டி’, ‘கன்னி மாடம்’, ‘மங்கி டாங்கி’ மற்றும் ஜி.வி.பிரகாஷ் - யோகி பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் என இதுவரை நான்கு படங்களை தயாரித்திருக்கும் ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐந்தாவது படமாக உருவாகும், இந்த புதிய முயற்சி படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை விரைவில் வெளியாக உள்ளது.