May 01, 2022 07:11 PM

சிலம்பம் விளையாட்டில் நுழைந்த அரசியலை பேசும் ‘சிலம்பம்’

சிலம்பம் விளையாட்டில் நுழைந்த அரசியலை பேசும் ‘சிலம்பம்’

பல்வேறு துறைகளில் திறமைசாலிகள் புறக்கணிக்கப்படுவதும், பணம் பலம் படைத்தவர்கள் வரவேற்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், விளையாட்டுத்துறையிலும் இத்தகைய அரசியல் தலைவிரித்து ஆடுவதை அனைவரும் அறிந்தது தான். ஆனால், இப்போது சிலம்பம் விளையாட்டிலும் இத்தகைய அரசியல் நுழைந்து திறமையானவர்கள் புறக்கணிக்கப்படும் அவலங்கள் நடக்க தொடங்கியுள்ளது. இத்தகைய அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு படமாகவும், சிலம்பம் விளையாட்டை மையப்படுத்திய விறுவிறுப்பான படமாகவும் உருவாகிறது ‘சிலம்பம்’.

 

லார்டு கணேஷ் கிரியேஷன்ஸ் சார்பில் பி.கே.எஸ் வழங்க எஸ்.லதா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி. இவர் பல படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

 

இதில் புதுமுகங்கள் மாஸ்டர் எம்.எஸ்.சஷாந்த், ஜெ. அஜீத், மாஸ்டர் அரிமா வர்மன்,  பவித்ரா,  மற்றும் மொட்டை ராஜேந்திரன், தீனா, மகாநதி சங்கர், முத்துக்காளை, வெங்கல்ராவ் மற்றும் பலர் நடிக்கின்றனர். 

 

வசதியற்ற குடும்பத்தை சேர்ந்த இளைஞர் சிலம்பத்தை முறையாக கற்றுக்கொண்டு பணபலம், அதிகார பலத்தை எதிர்த்து சிலம்ப விளையாட்டில் மாவட்ட அளவில் மட்டுமல்ல, மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவில் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி தங்கப்பதக்கங்களை அள்ளுகிறான். அந்த இளைஞனின் விடாமுயற்சியை படத்தின் மையக்கருவாக வைத்து, உண்மை சம்பவங்களை திரைக்கதையாக்கி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

 

ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கும் இப்படத்திற்கு ஷ்யாம்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, கே.என்.செந்தில் படத்தொகுப்பையும், தாடி கோவிந்தராஜ் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.