Sep 25, 2022 01:41 PM

மூன்று வித்தியாசமான நிலப்பரப்பில் உருவான ‘நித்தம் ஒரு வானம்’

மூன்று வித்தியாசமான நிலப்பரப்பில் உருவான ‘நித்தம் ஒரு வானம்’

ரா.கார்த்திக் இயக்கத்தில் ரைஸ் ஈஸ்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர், Viacom 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. அசோக் செல்வன், ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

 

இப்படம் குறித்து இயக்குநர் ரா.கார்த்திக் கூறுகையில், “நம்முடைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகதான் வரும். 'நித்தம் ஒரு வானம்' நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நிறைய கதாநாயகிகள் இருந்தாலும் , இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் 'நித்தம் ஒரு வானம்' இருக்கும்.

 

அசோக்செல்வன் தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகிகளான ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜ்சேகர் மூவருக்கும் சமமான கதாபாத்திரம் கதையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூவரும் அதை சிறப்பாக செய்துள்ளனர்.  இவர்களது கதாபாத்திரம் அனைத்து வயதில் உள்ள பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

 

நிறைய பாசிட்டிவான விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது  பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுச் சுவருக்குள் அடைந்து கிடக்கும் நமக்கு ஃபீல் குட் படங்கள் பெரும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.  திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 'நித்தம் ஒரு வான'த்தை உருவாக்கியுள்ளோம்.” என்றார்.

 

'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் மூன்று வித்தியாசமான காலக்கட்டம் மற்றும் நிலப்பரப்புகளில் அதாவது சென்னை, சண்டிகர், மணாலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.