’நூடுல்ஸ்’ தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறும்! - சுரேஷ் காமாட்சி நம்பிக்கை
’மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ’ஏழு கடல் ஏழு மலை’, ‘ராஜாகிளி’, ‘உயிர் தமிழுகு’, ‘வணங்கான்’ என பல பெரிய படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், ‘நூடுல்ஸ்’ என்ற படத்தை வெளியிடுகிறார்.
பிரபல நடிகர் அருவி மதன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். அருண் பிரகாஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் வெளியிடுவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘நூடுல்ஸ்’ படத்தை வெளியிடுவது குறித்து கூறிய சுரேஷ் காமாட்சி, “நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கவனம் செலுத்தலாமே? எனக் கேள்வி கேட்டதுண்டு. சிலருக்கு சினிமா மோகம். சிலருக்கு சினிமா தாகம். நமக்கு கொஞ்சம் தாகம் அதிகம். முரண்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டதால் முரண்களில் பயணப்படுவது பிடிக்கும்.
’ஏழு கடல் ஏழு மலை’, ’ராஜாகிளி’, ’உயிர் தமிழுக்கு’, ’வணங்கான்’ என பெரிய படங்களுக்கு நடுவே ’நூடுல்ஸ்’ என்ற சமூக பொறுப்புள்ள ஒரு படத்தின் மீதும் கண் விழுந்தது. நிச்சயம் பார்ப்பவர்களை ஏமாற்றாது என்ற நம்பிக்கை வந்த பிறகே படத்தின் மீது கைவைத்தேன்.
இயக்கம், நடிப்பு என எல்லா பக்கமும் கைதேர்ந்து படைத்திருக்கிறார்கள் இந்த ’நூடுல்ஸ்’ஸை. சிறிய படம், சின்ன நடிகர்கள் என்பதை மீறி இப்படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
’மிக மிக அவசரம்’ எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போன்ற தாக்கத்தை இப்படமும் ஏற்படுத்தும் என வலுவாய் நம்புகிறேன். பெரும் படங்களின் மார்க்கெட்டிங் கப்பல்களுக்கு நடுவே இந்த கிழித்துச் செல்லும் படகையும் களம் காண வைக்கிறோம்.
உங்கள் பேராதரவு எனும் காற்று வீசி எங்கள் படகை கரை சேர்ப்பீர்கள் எனும் பெரும் நம்பிக்கையுடன் செப்டம்பர் 8 ஆம் தேதி திரை வருகிறோம்.” என்று தெரிவித்தார்.