Mar 08, 2024 10:08 AM

’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ நீட் தேர்வுக்கு எதிரான படமா?

’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ நீட் தேர்வுக்கு எதிரான படமா?

சாய் ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சூர்யா சுப்பிரமணியன் தயாரித்து இயக்கும் படம் ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’. நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்கள் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் நீட் தேர்வின் உண்மை பின்னணி என்ன? போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் துவக்க விழா மார்ச் 7 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜான் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ என்ற தலைப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதோடு, அந்த தலைப்பின் அருகே இருக்கும் குறியீடுகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பும் என்று புரிய வைக்கிறது. ஆனால், தணிக்கை குழுவில் சிக்காதவாறு காட்சிகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், நீட் தேர்வை எதிர்த்து போராடும் மனநிலையை நாம் கடந்து வந்துவிட்டோம் என்று தான் நினைக்கிறேன். எனவே அதற்காக நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம், இந்த படத்தின் அறிமுக விழா இன்று நடைபெறுகிறது. இதில் நாயகன், நாயகன் யார்? என்பது எங்களுக்கு தெரியாது, இயக்குநரும் எங்களிடம் சொல்லவில்லை. இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார். எனவே, முகம் தெரியாத அந்த நாயகன், நாயகி, இயக்குநரும் தயாரிப்பாளருமான சூர்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்த படத்திற்கு ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ என்று தலைப்பு வைத்திருக்கும் சூர்யா சுப்பிரமணியம் கேப்ஷனாக NEET என்று போட்டிருக்கும் போதே படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பது புரிந்துவிடுகிறது. அதேபோல் நீட் என்ற ஆங்கில வார்த்தையில் ஒவ்வொரு எழுத்துக்கும் அவர் கொடுத்திருக்கும் விளக்கமும் கவனம் ஈர்க்கிறது. இந்த படத்தின் தலைப்பை வெளியிடுவதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள், அதில் மறைந்த அனிதா புகைப்படத்தை காண்பித்தார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், இனி அனிதா போல் யாரும் இறக்க கூடாது.

 

பொதுவாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், படப்படிப்பில் ஹரியர் வைத்த மாணவர்கள் யாராவது அதுபோன்ற தவறான முடிவை எடுப்பதில்லை. அதற்கு காரணம், கல்லூரி படிக்கும் போது அவர்கள் பக்குவமான மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், பள்ளி மாணவர்கள் பக்குவமில்லாத காரணத்தினால் தான் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்த நிலையை அரசு மாற்ற வேண்டும், அதற்காக மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதேபோல், அனிதா போல் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கி விட்டால் மட்டும் போதுமானதல்ல, அவர்கள் கொடுக்கும் அந்த பணம் அவரது உயிருக்கு ஈடாகுமா?, அனிதா போல் இனி யாரும் தற்கொலை செய்துக்கொள்ளக் கூடாது. அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை தான் அனிதாவின் மரணத்திற்கான சரியான தீர்வாக இருக்கும்.

 

மருத்துவம் என்பது மிக முக்கியமானது. உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு படிப்பவர்கள் சரியானவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கான படிப்பில் சேருபவர்கள் அதற்கு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். அதற்காக தான் நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள். சில விசயங்கள் தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது சரியாக இருக்கும், ஆனால் சமூகத்தின் பார்வையில் தவறாக இருக்கும். அதேபோல், சமூகத்தின் பார்வையில் சரியாக இருப்பவை, தனிப்பட்ட பார்வையில் தவறாக தெரியும். அதுபோல தான் நீட். சில பார்வைக்கு தவறாக தெரிந்தாலும், சமூகத்தின் பார்வையில் சரியானதாக இருக்கும்.” என்றார்.

 

விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் பேசுகையில், “’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ படத்தின் துவக்க விழா இனிதே நடந்திருக்கிறது. இன்று பலர் நியாயம் தெரியாமல் தான் இருக்கிறார்கள். ஆனால், இந்த தலைப்பு வைத்து படம் எடுக்கும் இயக்குநர் சூர்யா சுப்பிரமணியம் நியாயமான விசயம் ஒன்றை படத்தில் வைத்திருக்கிறார் என்பது புரிகிறது. முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கன் போன்றவரக்ள் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள். குறிப்பாக கக்கன் ஒரே ஒரு கதர் சட்டையுடன் இருந்தார், இத்தனைக்கும் அவர் போலீஸ் அமைச்சராக இருந்தார். ஆனால், இப்போதைய அரசியல்வாதிகள் ஒரு நாளில் பல சட்டைகளை மாற்றுகிறார்கள், மனைவிமார்களை மாற்றுகிறார்கள். ஊருக்கு ஒரு பொண்டாட்டி என்று வாழ்கிறார்கள். அந்த அளவுக்கு நியாயம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

 

ஒரு படம் வெற்றி பெற இயக்குநர் தான் முக்கியம், அதனால் இயக்குநருக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்தியில் ஷாருக்கானின் ஜக்தே இந்தியா என்ற ஒரு படம் பார்த்தேன், மிக சிறப்பான படம். கதைக்கு என்ன தேவையோ, அதை மட்டுமே படமாக்கியிருக்கிறார்கள். அதனால் அந்த படம் மிக சிறப்பான படமாக இருந்தது. அதேபோன்ற பாணியில் நம்ம ஊர்ல ஒரு படம் வந்தது. அதில் ஹீரோவுக்காக என்னவெல்லாம் செய்தார்கள். கிறிஸ்தவ தேவலாயத்தில் ஹீரோயினுக்கு திருமணம் நடக்க இருக்கும் போது ஹீரோ அங்கே போகிறார். அவரை பார்த்த ஹீரோயின் கண் அடிக்கிறார். அந்த ஹீரோவுக்கு ஒரு அப்பா அவர் பெரிய ரவுடி, இப்படி கதையில் என்னவெல்லாம் திணிக்க வேண்டுமோ அதை எல்லாம் திணித்து எடுத்தார்கள். அதனால் அந்த படம் மிகப்பெரிய பட்ஜெட் படமானது. ஆனால், தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்ட்டத்தை கொடுத்தது. அதனால் தேவையில்லாத விசயங்களை வைத்து படம் எடுக்க கூடாது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்குநராக வளர்ந்துவிட்டார். ஆனால், தனது உதவியாளர்களை இயக்குநராக அறிமுகப்படுத்துவதற்காக படங்கள் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் படங்களை சமீபத்தில் பார்த்தேன், மிக சிறந்த படங்களாக இருக்கிறது. பா.இரஞ்சித் நீ வாழ்க, அப்படி இருக்க வேண்டும். மற்றவர்களை தூக்கி விட வேண்டும்.

 

இந்த படத்தில் தமிழ் பேசும் பெண்ணை நாயகியாக்கி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தமிழர்கள் இல்லை என்றால் பிறருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் தப்பில்லை. மிக சிறந்த கருத்தை சொல்லும் திரைப்படமாக உருவாக உள்ள நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது படத்திற்கும் இயக்குநர் சூர்யா சுப்பிரமணியம் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சூர்யா சுப்பிரமணியன் பேசுகையில், “நிச்சயம் இந்த படத்தில் எதிர்பார்த்த விசயங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத விசயங்கள் இருக்கிறது. வை என்ன?, படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக்கொள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா வரை காத்திருங்கள். சுமார் 30 முதல் 35 நாட்களுக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன், அதுவரை எனக்காக காத்திருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் உங்கள் காத்திருப்பு வீண் போகாதபடி சிறந்த படைப்பாக ’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ இருக்கும்.” என்றார்.

 

கல்யாணசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மலேசியாவை சேர்ந்த இளவரசு இசையமைக்கிறார்.