Jun 07, 2022 06:29 PM

நயன்தாராவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் - ’O2’ இயக்குநர் உருக்கம்

நயன்தாராவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் - ’O2’ இயக்குநர் உருக்கம்

நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ’O2’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஜி.எஸ் இயக்கியிருக்கிறார். தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, யூடியூபில் வைரலாகியும் வருகிறது.

 

சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் படம் குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் ஜி.எஸ், “இதே பிரசாத் லேபில் தியேட்டரில் தான் எனது குறும்படம் திரையிடப்பட்டது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் வெங்கட் பிரபு சார் என்னை உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார். அவரிடம் இருந்து நிரைய கற்றுக்கொண்டேன். ரஞ்சித் அண்ணன் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். இந்த கதையை எழுதிவிட்டு நான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தான் முதலில் சென்றேன். அப்போது கதையை படித்த பிரபு சார் கதையில் உயிர் இருந்தால் அந்த கதை அதற்கான இடத்தை தேர்வு செய்துக்கொள்ளும் என்றார். இப்போது சொல்கிறேன் எனது கதை உயிர் என்றால் அதற்கான உடல் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தான். வித்தியாசமான கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவர்கள் என் கதையை தயாரிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த கதையை எழுதியவுடன் நயன்தாரா மேடம் தான் நடிக்க வேண்டும், என்று முடிவு செய்துவிட்டேன். அதை கேட்ட பிரபு சாரும் ஒகே சொல்லி நயன்தாரா மேடமிடம் கதை சொல்ல தேதி வாங்கிக் கொடுத்தார். கதையை கேட்ட நயன்தாரா மேடம், நிச்சயம் இந்த படத்தில் நடிக்கிறேன். கதை நன்றாக இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறி எனக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் ஒரு புது இயக்குநர் என்று பார்க்காமல் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்தார்கள். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ரொம்பவே உக்கம் அளிக்க கூடிய ஒரு நபர் அவர். என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அழகன், எடிட்டர் செல்வா ஆகியோர் எனது நண்பர்கள். நான் கதை எழுத தொடங்கிய போதே அவர்கள் என்னிடன் சேர்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்கள்.

 

ஒரு தாய் தனது பிள்ளைக்கு ஆபத்து என்றால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். அது தான் இந்த கதையின் கரு. என் தாயும் என் தந்தை இறப்புக்கு பிறகு வீட்டை நான் பார்த்துக்கொள்கிறேன், உன் ஆசை போல் சினிமாவில் நீ பயணப்படு, என்று எனக்கு ஊக்கமளித்தார். அதனால் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். என் தாய் மட்டும் அல்ல, அனைத்து தாய்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டார்கள். எனவே இந்த படத்தை அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், “பிரியாணி படத்தின் போதே ஒளிப்பதிவாளர் தமிழ் எனக்கு தெரியும். அவர்தான் இயக்குநரை அறிமுகம் செய்தார். இந்த படத்தின் கதை சுவாரஸ்யமானது. ஒரு தேடல் இந்த கதையில் இருந்தது. படம் எடுக்கலாம் என முடிவெடுத்த பின் இயக்குனர் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் எனக் கேட்டார். அதற்கு நயன்தாரா அவர்களும் ஒத்துகொண்டார். அவர் இதுபோன்ற கதையில் நடிக்க முடிவெடுத்தது பெரிய விஷயம். இந்த படத்தின் கதையை கேட்டபோதே கலை இயக்குனர் சதீஷ் தான் சரியாக இருப்பார் என முடிவெடுத்தோம். அவரும் நல்ல பணியை செய்து கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் அனைவரும் இயக்குநர் நண்பர் என்பதற்காக பெரிய உழைப்பை போட்டுள்ளனர். இந்த படத்தின் கதையை ஒட்டி இசையை சிறப்பாக உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர். குறைந்த நடிகர்கள் இருக்கும் இந்த கதையில், சிறப்பான ஆட்களையே தேடி தேடி போட்டுள்ளோம். இந்த படம் எங்களுக்கு திருப்திகரமாக வந்துள்ளது. இந்த படம் ஒடிடியில் வருவது நாங்கள் முன்னரே முடிவெடுத்த விஷயம். இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும். படம் பார்த்து நீங்கள் ஆதரவு தர வேண்டும். நன்றி” என்றார்.

 

O2

 

இயக்குநர் மற்றும் நடிகர் பரத் நீலகண்டன் பேசுகையில், “இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணம் ஸ்டண்ட் இயக்குனர் தான். நான் இயக்குநராக அறிமுகமான பின் நடிகராக போய் நிற்பது புதுமையாக இருந்தது. நயன்தாரா முன் நான் நடித்தது வித்தியாசமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி. இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். படத்தின் செட் அமைப்பு அட்டகாசமாக இருந்தது. என்னுடன் நடித்தவர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார். 

 

ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ் பேசுகையில், “இயக்குனர் முதல் முறை எனக்கு கதையை கூறிய போது எனக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. சவால் நிறைந்த ஒரு கதையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் படத்தை மேம்படுத்தி கொண்டே இருந்தனர். படத்தின் நடிகர்கள் அனைவரும் சிரத்தை எடுத்து நடித்துள்ளனர். கலை இயக்குநரின் பங்கு, எங்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. ஒளிப்பதிவாளரின் பணி அபாரமானது. எல்லோருக்கும் எனது நன்றிகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.” என்றார். 

 

கலை இயக்குநர் சதீஷ்குமார் பேசுகையில், “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் பல படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். இந்த படத்திற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும், தங்களது ஒட்டுமொத்த அர்பணிப்பையும் உழைப்பையும் கொடுத்துள்ளனர். இந்த படம் பண்ணும் போது, விக்ரம் பட வேலைகளும் போய்க்கொண்டிருந்தது. அதற்கு எனக்கு உதவியாக இருந்தது என் உதவியாளர்கள் தான். விக்ரம் படத்திற்கு கொடுத்த உழைப்பை தான் இந்த படத்திற்கும் கொடுத்துள்ளோம். படத்திற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

 

எடிட்டர் செல்வா ஆர்.கே பேசுகையில், “இந்த படம் எனக்கு ஸ்பெஷலான படம். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் எனது நெடுங்கால நண்பர்கள். நாங்கள் எப்போதும் ஒரே டீம் தான். இந்த படத்தின் முதுகெலும்பு S.R.பிரபு சார் தான். அவர் கொடுத்த பரிந்துரைகள் எங்களுக்கு உதவியாக இருந்தது. தங்க பிரபாகரன் அவர்கள் இந்த படத்திற்கு கொடுத்த பங்கு, இந்த படத்தை மேலும் வலுவாக்கியது. நயன்தாரா மேடம் இந்த படத்தில் நடித்தது பெரிய விஷயம், அவர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இந்த படம் ஒரே இடத்தில் நடப்பதால், பெரிய உழைப்பை எங்கள் குழு கொடுத்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார். 

 

O2

 

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், “பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் தான் படத்தின் இசை சிறப்பாக வர காரணம். நயன்தாரா தான் படத்தின் ஆக்சிஜன். ரித்விக் மற்றும் பரத் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இந்த குழுவுடன் பணிபுரிவது பெருமையான விஷயம். இயக்குனர் சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளார். எடிட்டரின் பணியை பார்த்தபின் நான் அவரது ரசிகர் ஆகிவிட்டேன்.  படத்தின் சுவாரஸ்யதிற்கேற்ப இசையமைத்துள்ளோம். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

முழுக்க முழுக்க பேருந்தில் நடக்கும் த்ரில்லர் திரைப்படமான இப்படம் ரசிகர்கள் இதுவரை கண்டிராத விஷுவல் அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.