Jul 06, 2023 08:19 AM

மீண்டும் ஒரு மாபெரும் ஆக்‌ஷன் விருந்து! - மிரட்டும் ‘சலார்’ டீசர்

மீண்டும் ஒரு மாபெரும் ஆக்‌ஷன் விருந்து! - மிரட்டும் ‘சலார்’ டீசர்

‘கே.ஜி.எஃப்’ என்ற மிகப்பெரிய ஆக்‌ஷன் திரைப்படத்தை கொடுத்து ஒட்டு மொத்த இந்திய திரையுலகின் பார்வையையும் கன்னட சினிமா மீது பட வைத்தது இயக்குநர் பிரஷாந்த் நீல் மற்றும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூட்டணி. இந்த கூட்டணியின் அடுத்த படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்த நிலையில், ‘பாகுபலி’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பிரபாஸுன் இவர்கள் இணைந்த தகவல் வெளியான நாள் முதல் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 

அந்த வகையில், இவர்கள் மூவரின் கூட்டணியில் உருவாகி வந்த ‘சலார்’ திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்திருப்பது ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியது.

 

இந்த நிலையில், ‘சலார் - பகுதி 1 : சீஸ் ஃபயர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 5.12 மணிக்கு வெளியாகியிருக்கும் டீசர், வெளியான சில நிமிடங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

 

முன்னணி கதாபாத்திரத்தின் சக்தி வாய்ந்த உரையாடல்களால் நிறைந்திருக்கும் இந்த டீசர், அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்திய திரைப்படம் என்ற சாதனைகளை முறியடிக்கும் வகையில் உள்ளது. இதுவே வெற்றிக்கான தொடக்கம் என்பதனையும் எடுத்துரைக்கிறது. 

 

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலும், அதனை சுற்றிலும் பிரம்மாண்டமான 14 திறந்த வெளி மற்றும் உள்ளரங்க அரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டு, வெள்ளித்திரையில் இதுவரை பார்த்திராத வகையில் பிரம்மாண்ட காட்சிகளை இந்த படம் வழங்கவிருக்கிறது.

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சலார் உருவாகியிருக்கும் இப்படம், இதுவரை இந்தியாவில் தயாரான திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான படமாக முன்னிலையில் உள்ளது. 'பாகுபலி' மற்றும் 'கேஜிஎஃப்' தொடர் போன்ற புகழ்பெற்ற பிளாக் பஸ்டர்களுக்கு இணையாக இப்படம் உள்ளது. ஈடு இணையற்ற காட்சியை உருவாக்குவதில் தயாரிப்பாளர்கள் எந்த வரையறையும் வைத்துக்கொள்ளவில்லை. 

 

குறிப்பாக விஎஃப்எக்ஸ் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளைச் சொல்லலாம். இதற்காக வெளிநாட்டில் உள்ள ஸ்டுடியோக்களின் நிபுணத்துவத்தை பட்டியலிட்டு தேர்ந்தெடுத்து, உயர்தரமான வி எஃப் எக்ஸ் மற்றும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய அதிரடி சண்டை காட்சிகளை வழங்கியுள்ளனர். திறமையான சர்வதேச சண்டை பயிற்சி கலைஞர்களும் பணியாற்றிருக்கிறார்கள்.   

 

சலார் பகுதி 1 பட டீசரின் வெளியீடு ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. அவர்கள் 'சலார்' என்ற பரந்த பிரபஞ்சத்தை ஆராயும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.