பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம்! - நடிகையின் புகாரால் மேலும் பரபரப்பு
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கு மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி ஒருவர் தகவல் வெளியிட்டார். இதையடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரைப்போல் மேலும் மூன்று ஆசிரியர்கள் இதுபோல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திடமும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்த நடிகை கவுரி கிஷன், தனக்கும் பள்ளியில் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது, என்று தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகை கவுரி கிஷன் வெளியிட்டுள்ள பதிவில், நான் அடையாறு பள்ளியில் படித்தபோது இதுபோன்ற கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டேன். தான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டனர், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகளும் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள நடிகை கவுரி கிஷன், உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுசி கிஷனின் இந்த பதிவை தொடர்ந்து, பத்ம சேஷாத்ரி பள்ளியை போன்று மேலும் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் விவகாரங்களில் சிக்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.