அலைகள் ஓய்வதில்லை, காதல் பட வரிசையில் ’பள்ளிப் பருவத்திலே’
தமிழ் சினிமாவில் காதல் காற்று வீசி ரொம்ப நாளாகிறதே, என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிற காதலர்களுக்கு, இதோ வந்துவிட்டது ‘பள்ளிப் பருவத்திலே’. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’ பட வரிசைகளில் மீண்டும் ஒரு காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் காதலை மட்டும் இன்றி, ஆசிரியர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும், என்பதையும் நச்சென்று சொல்லியிருக்கிறது.
இதற்காக இப்படத்தை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர், தனது கற்பனை கதையை மட்டுமே படமாக்காமல், 200 பேர் படித்துக் கொண்டிருந்த அரசு பள்ளியை 2000 மாணவர்கள் படிக்கும் அளவுக்கு உயர்த்திய ஒரு அரசு பள்ளி ஆசிரியரின் வாக்கையை இப்படத்தின் முக்கிய கதையாக்கியுள்ளார். அந்த ஆசிரியரிடம் தான் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கரும் படித்திருக்கிறார் என்பது கூடுதல் சேதி.
இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில், வெண்பா ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான சில படங்களில் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வெண்பா, தமிழ்ப் பேசும் தமிழ் நடிகை என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.
விட்டால் உண்மையாகவே காதலித்து விடும் அளவுக்கு படத்தில் பர்பாமன்ஸ் செய்திருக்கும் இந்த இளம் ஜோடியின் நடிப்பில் பள்ளிப்பருவத்திலே நமது பள்ளி காலங்களை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அமைந்த பாடல்களும், அதை படமாகிக்கியுள்ள விதமும், படம் நிச்சயம் ஹிட், என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
விஜய நாராயணன் என்ற புதியவர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஒட்டு மொத்த திரையுலகினரும் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார்.