ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் ‘பன்னி குட்டி’
யோகி பாபு, கருணாகரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘பன்னி குட்டி’ படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். ‘கிருமி’ மற்றும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘சுழல்’ இணைய தொடரை இயக்கியுள்ள அனுசரண் இயக்கத்தில் உருவான காமெடி திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக லக்ஷ்மி பிரியா நடித்திருக்கிறார். இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திண்டுக்கல் லியோனி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்குள் எண்ட்ரியாகியிருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ராமர், சிங்கம்புலி, பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பல காமெடி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் இப்படத்தை சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத்ராம் தயாரித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் கதையை எழுதியுள்ள ரவி முருகையா இயக்குநர் அனுசரணுடன் இணைந்து திரைக்கதையும் அமைத்துள்ளார். கே இசையமைக்க, சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட இயக்குநர் அனுசரண் படம் குறித்து பேசுகையில், “எனக்கு வாய்ப்புகொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையா உடைய கதை தான் இந்த பன்னிகுட்டி. இந்த கதையை தயாரிப்பாளரிடம் கூறும் போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள், ஆனால் முழு அர்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நிஜ பன்னிகுட்டியுடன் படப்பிடிப்பை நடத்தினோம். அது மிகவும் கடினமாக இருந்தது. விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை, பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்தி தான் படம் எடுத்தோம். உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும், அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்கை என்பதை இந்த படம் கற்றுக்கொடுக்கும்.” என்றார்.
நடிகர் கருணாகரன் பேசுகையில், “ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு கிடைக்கும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்த கதையை இயக்குனர் கூறிய போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான். இயக்குனர் உடைய பதட்டமில்லாத தன்மை, என்னை ஆச்சர்யபடவைத்தது. இசையமைப்பாளர் இந்த படத்தில் கொடுத்திருக்கும் இசை, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். இந்த படம் நம்பிக்கை கொடுக்கும் படம். இந்த படத்தில் யோகிபாபு நடித்திருப்பது எங்களுக்கு சந்தோசம். படத்தை மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.” என்றார்.
21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தது குறித்து பேசிய திண்டுக்கல் லியோனி, “இந்த படத்தின் மூலமாக 21 வருடத்திற்கு பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். இந்த படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. நான் இந்த படத்தில் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை இயக்குனர் காரணமாக தான் என்னிடம் கொடுத்திருக்கிறார். எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குனர் அனுசரண் வேலைப்பார்ப்பார். கருணாகரனுக்கு இந்தபடம் பெரிய வெற்றியாக இருக்கும். அனுசரண் நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கும் படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் சமீர் பரத்ராம் பேசுகையில், “படத்தை தியேட்டருக்கு கொண்டு வர உதவிய லைகா புரடக்சனுக்கு நன்றி. சிறிய படங்களுக்கு, திரைக்கதை நன்றாக இருந்தால் தான், பெரிய நடிகர்கள் இல்லாமலும் அதை சிறப்பாக எடுக்க முடியும். அனுசரண் இயக்குநர் மட்டும் அல்ல, சிறந்த படதொகுப்பாளரும் கூட. கருணாகரன் சிறந்த நடிகர், அவர் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். சின்ன படங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்.” என்றார்.