Jul 24, 2024 07:56 PM

23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட ‘பிதா’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி!

23 மணி  நேரம், 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட ‘பிதா’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி!

எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சாரிபில் ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிதா’. ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுக்கப்பட்ட சாதனை திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

பாபா கென்னடி வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். நரேஷ் இசையமைக்க, ஸ்ரீவர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார். கே.பி.நந்து கலை இயக்குநராக பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். 

 

வரும் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ’பிதா’ படத்தை பல தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை வெளியிட்டு வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

 

இந்த நிலையில், ‘பிதா’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு போஸ்டர் வெளியீடு ஜூலை 23 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், சம்பத்ராம், சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்செல்வன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஜி.சிவராஜ், ”நல்ல கலைஞர்களை கைதூக்கி விடும் நோக்கத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட எஸ்.ஆர் பிலிம் பேக்டரி இன்று மூன்று திரைப்படங்களை தயாரித்திருக்கிறது என்பது யோசிக்க கூடிய ஒன்று. இயக்குநர் சுகன் என்னிடம் வந்து, சார் ஒரு நாளில் ஒரு படத்தை எடுக்கப் போகிறேன், என்றார். ஒரு நாளில் எப்படி முடியும், என்று நான் யோசித்தேன். பிறகு நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், என்று சொன்னேன். அவர் சொன்னது போலவே ஒரு நாளில் படத்தை எடுத்து முடித்துவிட்டார், அவருக்கு என் வாழ்த்துகளும், நன்றியும். 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படத்தால் இயக்குநர் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், அவரை விட இந்த படத்தின் தயாரிப்பாளர் தான் உண்மையிலேயே சாதனை படைத்திருக்கிறார். அதாவது, ஒரே இயக்குநரை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதுபோல் வேறு எந்த தயாரிப்பாளரும் செய்திருப்பார்களா என்று தெரியாது. எனவே, தயாரிப்பாளரின் இத்தகைய செயல் தான் உண்மையிலேயே சாதனை என்று சொல்லலாம். இந்த படத்தை எடுத்து முடித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், படம் எப்படி வந்திருக்கிறது, எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள், அவர்களுடைய அந்த எதிர்பார்ப்பு மற்றும் படம் பற்றிய அவர்களது மகிழ்ச்சிக்காக தான் இந்த படத்தை வெளியிடுகிறோம். இந்த படத்தை அடிப்படையாக கொண்டு இன்னும் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பல கலைஞர்களுக்கு எஸ்.ஆர் பிலிம் பேக்டரி வாய்ப்பு கொடுக்கும், என்பதை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.

 

நடிகர் சாம் பேசுகையில், “இதற்கு முன்பு ‘சுயம்வரம்’ என்ற திரைப்படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டது. ஆனால், அந்த படம் முன்னணி நட்சத்திரங்களுடன், 6 யூனிட்டாக பிரிந்து அந்த படத்தை எடுத்தார்கள். ஆனால், இந்த படம் 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்ததோடு, இரண்டு யூனிட்டாக மட்டுமே பிரிந்து எடுத்து முடித்தார்கள். எனவே, இந்த படம் தான் உண்மையிலேயே சாதனை படம் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு முயற்சிக்கு உறுதுனையாக இருந்த தயாரிப்பாளர் சிவராஜ் சாருக்கு நன்றி. இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக இருந்தது. படப்பிடிப்பு தொடங்கிய நிமிடத்தில் இருந்து, அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் வேகமாக பணியாற்றினார்கள். நடிகர்கள் அனைவரும் தேர்ந்த நடிகர்களாக இருந்ததால் தான் இந்த படம் சாத்தியமானது. இந்த படத்திற்கான விளம்பர யுக்திகளை மேற்கொண்டு வரும் நடிகர் ஆதேஷ் பாலாவுக்கு நன்றி. இப்படிப்பட்ட சாதனை படத்தில் நடித்திருக்கிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு படம் சாத்தியமானதற்கு இயக்குநர் சுகன் மற்றும் அவரது குழு தான் காரணம். எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம், ஆனால் அதில் விசயம் இருக்க வேண்டும், அப்படி இருந்தால் அந்த படம் வெற்றி படம் மட்டும் அல்ல பெரிய படமாகவும் இருக்கும். அந்த வகையில், விசயம் உள்ள ‘பிதா’ நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் ஆதேஷ் பாலா பேசுகையில், “என்னுடைய இயக்குநர் சுகன் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை என் அம்மா, அப்பாவுக்கு காணிக்கையாக்குகிறேன். அவர்களுடைய ஆசை நான் நடிகராக வேண்டும் என்பது. 20 வருட போராட்டங்கள், பல அவமானங்களை கடந்து தான் இங்கு நிற்கிறேன். இது அனைத்து கலைஞர்கள் எதிர்கொள்வது தான். இந்த படத்தில் சாம் சாருடன் பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. ஒரு நாளில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்பதால், பதற்றத்துடன் தான் நடித்தோம். அதிலும் லைவ் ரெக்கார்டிங் என்பதால் அதற்கு ஏற்றவாறு பேசி நடிக்க வேண்டும். நிறைய சவால்கள் மிக்க இந்த படத்தை வெற்றிகரமாக எடுத்து முடிக்க, தொழில்நுட்ப கலைஞர்களும் காரணம், அவர்களுக்கும் நன்றி. என்னதான் நாங்கள் படம் எடுத்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்கள் தான். நீங்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறீர்கள், இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல படமாக இருக்கும். அதனால் மக்கள் இந்த படத்தை திரையரங்குகளுக்கு வந்து பார்க்க வேண்டும். இதை என் அப்பா மேலிருந்து பார்த்துக்கொண்டிருப்பார், அவர் சந்தோஷம் அடைவார், அவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசுகையில், “இப்படி ஒரு சாதனை படத்தை இயக்கிய இயக்குநர் சுகன் மற்றும் தயாரித்த சிவராஜ் சாருக்கு என் வாழ்த்துகள். இங்கு வந்த போது தான் ஒரு விசயத்தை கவனித்தேன். இந்த படம் 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதோடு, நான் பிறந்த தேதியும் 23, இந்த நிகழ்ச்சி நடக்கும் நாளும் ஜூலை 23, ஒரே 23 ஆக இருக்கிறதே என்று வியந்தேன், எனக்கு ரொம்ப பிடித்த எண் 23. இன்று இரண்டு மணி நேரம் திரைப்படத்தை கொடுப்பதற்காக மிகவும் உழைக்கிறார்கள். இப்படி ஒரு சூழலில், ஒரு ஸ்மார்ட்டான படத்தை அதுவும் லைவ் ரெக்கார்டிங்கோடு கொடுத்திருக்கிறார்கள். இன்றைய சூழலில் லைவ் ரெக்கார்டிங் என்பது மிகவும் கடினமான விசயம், அதை பெரிய படங்கள் எடுப்பவர்களே செய்வதில்லை. அப்படி ஒரு விசயத்தை இவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் திரையரங்கிற்கு வர வேண்டும், மக்கள் ஆதரவு தர வேண்டும். இந்த படத்தை வெளியிடும் ஜெனிஷ் அண்ணாவுக்கு வாழ்த்துகள். என் படத்தை அவர் தான் வெளியிட்டார். அந்த படத்திற்கு அவர் என்ன சொன்னாரோ அதை சிறப்பாக செய்து, வெற்றி படமாக்கினார், அவருக்கு நன்றி.” என்றார்.

 

இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பேசுகையில், “23 நிமிடங்களில் 23 நிமிடங்களில் ஒரு படத்தை எடுத்து முடிப்பது சாதாரண விசயமில்லை. ஒரு நாள் ஒரு காட்சி எடுப்பதே மிக கடினமான விசயம் என்ற போதில் ஒரு படம் என்பது வியப்பாக இருக்கிறது. இயக்குநர் சுகன் சொல்லும் போது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர் சொல்லும் போது, இதை நீங்கள் சரியாக செய்தால், இதுவே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும், இதை வைத்தே ஓட்டிவிடலாம், என்று சொன்னேன். அதன்படி அவர் படத்தை சிறப்பாக முடித்திருக்கிறார். சுகனுக்கு கிடைத்த தயாரிப்பாளர் சிவராஜ் சாருக்கு மீண்டும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு முயற்சி எடுப்பது சாதாரணமான விசயம் இல்லை, இதை சிவராஜ் செய்திருக்கிறார். அவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுப்பார், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “’பிதா’ ஒரு கடத்தல் கதை, ஒரு கலகலப்பான கடத்தல் கதையாக இருந்தது. படத்தின் முதல் பாதி மிக சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் இருந்தது. நடிகர் சாம் படத்தை தூக்கி நிறுத்திவிட்டார். எனக்கு பிடித்த காமெடி நடிகர் என்றால் சுருளிராஜன் தான், அவரை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும். அதன் பிறகு எனக்கு பிடித்த காமெடி நடிகர் வெண்ணீர் ஆடை மூர்த்தி. இப்போ எனக்கு பிடித்த காமெடி நடிகர் என்றால் அது சாம்ஸ் தான். அவர் மிக சாதாரணமாக, அசால்டாக காமெடி செய்து சிரிக்க வைக்கிறார். இந்த படத்திலும் சாதாரணமாக, திமிராக காமெடி காட்சிகளை கையாண்டிருக்கிறார், அது அனைத்தும் நன்றாக இருந்தது. 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு படத்தில் நிறைய விசயங்கள் இருக்கிறது, இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இரண்டு வகையில் லாபம் கிடைத்திருக்கிறது. ஒன்று, சரியான திட்டமிடலுடன் படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும், அந்த வகையில் சுகன் சரியான முறையில் திட்டமிட்டு படம் எடுத்திருக்கிறார். அதேபோல் தேவையில்லாத செலவுகளை குறைத்து படப்பிடிப்பை முடித்திருப்பதாலும் தயாரிப்பாளருக்கு செலவு குறைந்தால் அதுவும் லாபம் தான். இதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

 

இயக்குநர் சுகன் பேசுகையில், “இந்த படம் ஆரம்பிக்கும் போது சிவராஜ் சார் தயாரிப்பாளர் அல்ல. முதலில் வேறு ஒருவர் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அவரால் தயாரிக்க முடியவில்லை. நான் அழுதுக்கொண்டிருந்த சமயத்தில் வேறு ஒருவர் தயாரிக்க வந்தார், அவர் மூலமாக படம் முடிந்தது. ஆனால், இப்போது முழுமை அடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருப்பதற்கு சிவராஜ்சார் தான் காரணம். கடவுள் நேரடியாக வர மாட்டார், மனிதர்கள் மூலமாக வருவார் என்று சொல்வார்கள், அதுபோல் எனக்கு இப்போது கடவுள் என்றால் அது சிவராஜ் சார் தான். இவர் இல்லை என்றால், நான் இங்கி நிற்க முடியாது. நான் மட்டும் அல்ல என் குடும்பத்தாரும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சாம்ஸ் சார் எனக்கு பெரும் துணையாக நின்றார். படப்பிடிப்பு முடித்துவிட்டு, வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது சாம்ஸ் சார் தான் எனக்கு உதவியாக இருந்தார். அதேபோல், அனு கிருஷ்ணா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார், அவருக்கும் நன்றி. மற்ற நடிகர்கள் மிக குறைவாக தான் சம்பளம் வாங்கினார்கள்.

 

இப்படி ஒரு சாதனை படம் எடுக்க முடியுமா? என்பது பெரும் கேள்வியாக இருந்தாலும், இதை நான் சாத்தியமாக்க எனக்கு துணையாக நின்றது தயாரிப்பாளர் சிவராஜ் சார் தான். அவர் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களை இயக்கி முடித்துவிட்டேன். என்னை போன்று பல கலைஞர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுக்க ரெடியாக இருக்கிறார். அதேபோல், இந்த நேரத்தில் என் குருநாதர் ரமேஷ் செல்வன் சார் பற்றி சொல்ல வேண்டும். நான் இப்படி ஒரு படத்தை இயக்கியிருப்பதை கேள்விப்பட்டு என்னை தொடர்புக்கொண்டவர், என்ன பட்ஜெட்டில் எடுத்து முடித்தேன், என்று கேட்டார். சிறிய பட்ஜெட் தான் சார், என்று சொன்னேன். பட்ஜெட்டை சொல், என்றார். நான் சொன்னதும், சரி நான் வெளியூர் செல்கிறேன், திரும்ப வந்ததும் நாம் ஒரு படத்தை ஆரம்பிக்கலாம், என்று சொன்னார். அவர் என் மீது வைத்த இந்த நம்பிக்கை எனக்கு முதல் வெற்றி. இந்த வெற்றியை தொடர்ந்து ‘பிதா’ படமும் எனக்கு மற்றொரு வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, நன்றி.” என்றார்.