Jun 01, 2024 08:38 AM

”சினிமாவை அழிக்கும் விஷக்கிருமிகள்” - ‘ஆர்.கே வெள்ளிமேகம்’ பட விழாவில் அன்புச்செல்வன் காட்டம்

”சினிமாவை அழிக்கும் விஷக்கிருமிகள்” - ‘ஆர்.கே வெள்ளிமேகம்’ பட விழாவில் அன்புச்செல்வன் காட்டம்

சந்திரசுதா ஃபிலிம்ஸ் சார்பில் பி.ஜி.ராமச்சந்திரன் தயாரித்துள்ள படம் ‘ஆர்.கே வெள்ளிமேகம்’. இப்படத்தை சைனு ஜவக்கடன் இயக்கியுள்ளார். ஐந்து மலையாள திரைப்படங்களை இயக்கியிருக்கும் இவர் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

 

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.எம்.பிரபாகர் ராஜா, சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன், இந்திய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஆந்தமுருகன், தயாரிப்பாளர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, நடிகர்கள் காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.ராமச்சந்திரன் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “நான் கேரளாவைச் சேர்ந்தவன் என்றாலும் தமிழ்நாட்டில் ஐந்து வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன். தமிழ் மற்றும் தமிழ் சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால் தான் தமிழில் படம் தயாரித்திருக்கிறேன். சினிமா உலகத்தில் ஏமாற்றக்கூடியவர்கள் அதிகம் என்று என்னை பலர் பயமுறுத்தினார்கள். ஆனால், இங்கு அப்படி இல்லை. சில கஷ்ட்டங்கள் இருக்கத்தான் செய்தது ஆனால் அதை எல்லாம் கடந்து வெற்றிகரமாக இந்த படத்தை முடித்து விட்டேன். இனி நீங்கள் தான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதிகமான பொருச்செலவில் ஒரு தர்மான படத்தை எடுத்திருக்கிறோம். இதில் சஸ்பென்ஸ், திரில்லர், காதல் என அனைத்தும் இருக்கிறது, நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

 

இயக்குநர் சைஜு ஜவக்கடன் பேசுகையில், “நான் மலையாளத்தில் ஐந்து திரைப்படங்கள் இயக்கியிருக்கிறேன்.  தமிழில் படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசையை நிறைவேற்றிய தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்தில் கேமராவுக்கு பின்னாடி பணியாற்றியவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், கேமராவுக்கு முன்னாடி பணியாற்றிய, அதாவது நடிகர் நடிகைகளில் கர்நாடகவைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக புரோமோஷன் பணிகளுக்காக நான் கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்காக பல நடிகர்களை நானே நேரில் சென்று அழைத்தேன். இதே கேரளாவாக இருந்தால் பத்து பேரை நான் அழைத்து இருந்தால் அதில் ஆறு பேராவது வந்திருப்பார்கள், ஆனால் இங்கு ஒருத்தர் கூட வரவில்லை, வருத்தமாக இருக்கிறது.

 

எனக்கு மிகவும் படித்த நடிகர் விஜய் சேதுபதி, கேரளாவில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால், அவரை இந்த நிகழ்வுக்கு அழைக்க ஆசைப்பட்டேன், ஆனால் அவரால் இங்கு வர முடியாது, என்று தெரியும். அதனால், அவருடன் என் படத்தின் போஸ்டரை வைத்து புகைப்படம் எடுக்க முடிவு செய்தேன். அதற்காக நான் தயாரிப்பாளரை அழைத்துக்கொண்டு நேரடியாக அவரை சந்திக்க முடிவு செய்தேன். காரணம், அவர் மிகவும் எளிய மனிதர், அனைவருடனும் எளிமையாக பழக கூடியவர் என்ற செய்திகள் அடிக்கடி வரும். கேரளாவிலும் அவரை அப்படி தான் சொல்வார்கள். அதனால் அவரை தேடி சென்றேன், ஆனால் அவரை எங்களால் பார்க்க முடியவில்லை. நான் என்ன அவரிடம் ஐந்து செண்ட் நிலமா கேட்கப்போகிறேன், ஒரே ஒரு புகைப்படம் தானே, ஆனால் அதற்கு அவரை சுற்றி இருப்பவர்கள் விடவில்லை. இப்பவும் சொல்கிறேன், இது விஜய் சேதுபதி சார் சொல்லவில்லை, அவர் அப்படி சொல்லக்கூடிய ஆளும் இல்லை, ஆனால் அவரை சுற்றியிருப்பவர்கள் அவரை நெருங்கவிடவில்ல, என்பது கவலையாக இருக்கிறது. போனது போகட்டும் விட்டுவிடுவோம், இனி படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது ஊடகவியாளர்களின் கடமை, தயவு செய்து இந்த புதியவர்களுக்கு கைகொடுத்து உதவுங்கள், நன்றி.” என்றார்.

 

RK Vellimegham Audio Launch

 

சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன் பேசுகையில், “கேரளாவில் இருந்து வந்து தமிழ் படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு படத்தையும் யாரும் தடை செய்வதற்கு இங்கு உரிமை இல்லை அப்படி தடை செய்தால் நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் தக்க நடவடிக்கை எடுப்பேன். ஆர்ட் டைரக்டர் யூனியன் திருவள்ளூர் அருகே யோகி பாபு நடிக்கும் திரைபடத்தின் படப்பிடிப்பை நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எத்தனையோ சங்கங்கள், அரசியல் கட்சிகள் இருக்கிறது. யாரும் யாருக்கும் தடை போட முடியாது. பிரியாணிக்காகவும், கட்டிங்கிற்காகவும் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள், இவர்கள் தான் தமிழ் சினிமாவின் விஷக்கிருமிகள்.” என்றவர், அவர்களுடைய புகைப்படங்களையும் நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

 

சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா பேசுகையில், “திரைத்துறையில் முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களும் திரைப்படத்துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல நல்வழிகளை செய்யும் ஒரு ஊடகமாகும்.” என்றார்.