நடிகர் செந்தில் மீது போலீஸ் வழக்கு பதிவு - நீதிபதி அதிரடி உத்தரவு!
அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலாளரான நடிகர் செந்தில், சென்னையில் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திருச்சி தொகுதி எம்.பி குமாரை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சு மாநகர் காவல் துறையிடம் எம்.பி குமார் அளித்த புகாரில், “தினகரனின் ஆதரவாளரான நடிகர் செந்தில் தன்னை விமர்சனம் செய்து மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருச்சி மாநகர் குற்றப்பிரிவு போலீசார் நடிகர் செந்தில், டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால், நடிகர் செந்தில் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கினை ரத்து செய்யக் கோரி நடிகர் செந்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அதில் சம்பவம் சென்னையில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்வதற்கு அதிகாரம் இல்லை. முதல் கட்ட விசாரணை நடத்தாமலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் விரோதம் காரணமாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன், நடிகர் செந்தில் ஆகியோரை வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.