விஜய் தந்தை மீது போலீஸ் வழக்கு பதிவு!
கடந்த தீபாவளியன்று வெளியான விஜயின் மெர்சல் படத்திற்கு எதிராக சர்ச்சை குறித்து பதில் அளித்த இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பல்வேறு கருத்துக்களையும், பல சேனல்களுக்கு பேட்டியும் அளித்தார்.
மேலும், திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அவர், ”திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது சாமிக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது. சாமிக்கு காணிக்கை கொடுத்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாரும் தேர்வுக்கு போக வேண்டாம், உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
எஸ்.ஏசந்திரசேகரின் இந்த கருத்துக்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் 'மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசியதாக எஸ்.ஏ.சி மீது நான் புகார் அளித்தும் போலீசிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சென்னை விருகம்பாக்கம் போலீசார் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.