’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்கு மீண்டும் சிக்கல்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில், பல்வேறு சிக்கல்களால் படப்பிடிப்பு அவ்வபோது பாதிக்கப்பட்டது. இருப்பினும், படக்குழுவினரின் விடா முயற்சியால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமக்கப்பட்டது.
இதற்கிடையே கொரோனா பரவலால் பல மாதங்களாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டாலும், கொரோனா முதல் அலைக்குப் பிறகு படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கிய உடன், மீண்டும் தொடங்கப்பட்ட பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு பாகமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் சுமார் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டுவிட்டது.
இன்னும் 10 சதவீத படப்பிடிப்புகளே பாக்கியிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருப்பதால், அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
பாண்டிச்சேரியில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, 300 பேர்கள் கலந்துக்கொண்ட பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் சுமார் 26 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்களாம். இதனால், படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட முக்கிய நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் அச்சம் அடைந்துள்ளார்கள்.
மேலும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அரங்கம் அமைக்கப்பட்டதாகவும், அதில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா இருந்து, அவர்கள் மூலமாகவே மற்றவர்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதே சமயம், கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் இந்தியாவை தாக்க கூடும் என்பதால், அதற்குள், முதல் பாகத்தை முடித்தாக வேண்டும் என்று, ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு வேகமாக பணியாற்றி வருகிறார்களாம்.