அவமானத்துடன் பா.ஜ.க-வில் இருந்து விலகிய பிரபல நடிகை!
தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் பா.ஜ.க-வில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக நடிகை குஷ்பு, காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவருடைய அரசியல் செயல்பாடுகளும், பணிகளும் தமிழக பா.ஜ.க-வினரை சுறுசுறுப்படைய செய்தது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, நடனம் ஆடியும், பாட்டு பாடியும் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்தாலும், இறுதியில் அவர் படுதோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு நடிகை குஷ்பு அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், காயத்ரி ரகுராம், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட திரை பிரபலங்கள் அவ்வபோது பா.ஜ.க-வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில் திரை பிரபலங்களை கட்சியில் இணைப்பதில் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், மேற்குவங்க மாநில பா.ஜ.க-வில் முக்கிய பங்கு வகித்து வந்த பிரபல மேற்குவங்க நடிகை ரூபா பட்டாச்சார்ஜி, பா.ஜ.க-வில் இருந்து விலகியுள்ளார். அவமானம் தாங்க முடியாமல் பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர், கட்சியின் அடைப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நடிகை ரூபா பட்டாச்சார்ஜி அளித்துள்ள பேட்டியில், நான் சந்தித்த அவமானங்களால் கட்சியில் இருந்து விலகுகிறேன். கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி அமைச்சர்கள் இருவரை, சிபிஐ கைது செய்தது கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க பாஜக தலைமை மீது எனக்கு அதிருப்தி உள்ளது. பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு என்னை கடுமையாக திட்டினார். அவரிடம் அதற்கான காரணம் கேட்டேன். ஆனால் அவர் எதுவும் சொல்ல மறுக்கிறார். அது, எனக்கும் மிகவும் அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.