May 06, 2022 08:27 PM

முன்னணி இயக்குநர்களின் தூக்கத்தை கெடுத்த ‘விசித்திரன்’

முன்னணி இயக்குநர்களின் தூக்கத்தை கெடுத்த ‘விசித்திரன்’

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘விசித்திரன்’ படத்திற்கு ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் அப்படத்தை பார்த்து வியந்து பாராட்டி வருகிறார்கள்.

 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காக ‘விசித்திரன்’ படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதில் முன்னணி இயக்குநர்கள் பலர் கலந்துக்கொண்டு படம் பார்த்தனர்.

 

படம் முடிந்த பிறகு பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார், அதற்குள் பலர் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அதன் பின்னர் தான் குறிப்பிட்ட படத்தை இயக்குனர் சங்கத்திற்கு திரையிடுவர். ஆனால், விசித்திரன் படத்தை முதலில் இயக்குனர் சங்கத்தினற்கு திரையிடலாம் என்று ஆர் கே சுரேஷ் சொன்னபோது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.  எப்போதும், படைப்பாளிகளிடம் திரையிடும் படத்தை பற்றி அவர்கள் முதலில் முன் வைப்பது விமர்சனத்தையும், கேள்வியையும் தான். அதன் பிறகு தான் பாராட்டு என்பது கூட. அதனால் நான் எப்போதுமே என் படத்தின் பர்ஸ்ட் காபியை எனது துணை இயக்குனர்களிடம் காண்பிக்க மாட்டேன். அவர்கள் பல கேள்விகளை முன்னவைப்பார்கள் என்பதே காரணம். அவர்களுக்கு எப்போதுமே இறுதியில் தான் திரையிடுவேன். இந்த செயல் ஆர் கே சுரேஷ் அவரின் நடிப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. அவரின் நம்பிக்கையை கண்டு நான் பெருமைப்பட்டேன். எனக்கு தெரிந்து ஒரு நடிகன் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு இத்தனை படைப்பாளிகளுக்கு மத்தியில் தைரியமாக நிற்பது இதுவே முதல் முறை. அந்த தைரியம் எனக்கு பிடித்திருக்கிறது. இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து, இயக்குனருடன் இணைந்து கடினமாக உழைத்து தன்னுடைய மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்த நடிகர் ஆர் கே சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதை என்னால் ஆழமாக உணர முடிகிறது.

இது மெதுவாக சூடு பிடிக்கும் ஒரு கதைக்களத்தை கொண்ட ஒரு திரைப்படம். இது போன்ற படங்களை நம் தமிழ் ரசிகர்கள் பார்த்து பழக்கப் பட்டதில்லை. ஆர் கே சுரேஷ் போன்ற இளைஞர்கள் அவர்களின் நடிப்பை வெளிப்படுத்த இது போன்ற படைப்புகளை கையில் எடுத்தால் மட்டுமே அது சாத்தியம்.

 

உண்மையை சொன்னால் எனக்கு மலையாள படம் ’ஜோசப்’ ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த படம் மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. இந்த படைப்பின் மூலம் ஆர் கே சுரேஷ் என்னும் ஒரு உன்னதமான நடிகன் நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்து விட்டான் என்ற நம்பிக்கையை நான் அவருக்கு கொடுத்தேன். இந்த தாக்கத்தின் காரணமாக நான் அண்ணன் ஆர் வி உதயகுமாரிடம் இப்படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினேன். இன்றைக்கு ஒரு படம் முதல் மூன்று நாட்கள் திரையரங்குகள் நிரம்ப ஓடினால் அது தான் அந்த படத்திற்கான வெற்றி. பூ, பிஞ்சி,கனி, போன்ற படங்களுக்கு இப்போது இடமில்லாமல் போனது.

அன்னக்கிளி 7 நாட்கள் கழித்து ஓடியது, 16 வயதினிலே பத்து நாட்கள் கழுத்து ஓடியது என்பதெல்லாம் இப்போது கிடையாது. ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது முதல் மூன்று நாட்கள் மட்டுமே. இது போன்ற சூழலில் ஒரு மசாலா படத்தையோ, கமேற்சியல் படத்தையோ தேர்வு செய்து நடிக்காமல் கலை நயமான ஒரு படத்தை தேர்வு செய்து. நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் மிக பெரிய ஊழலை தன் சொந்த பணத்தின் மூலம் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக ஆர் கே சுரேஷுக்கு என் பாராட்டுக்கள்.

 

இந்த படம் குறித்து நான் இரண்டு விமர்சனங்களை மட்டுமே ஆர் கே சுரேஷிடம் கூறினேன். மேலும், இந்த படத்தை பார்த்த அனைத்து படைப்பாளிகளும் இந்த படத்தை பற்றியான விமர்சனத்தை நல்ல முறையிலோ, அல்லது குறைகளை சுட்டி காட்டியோ தங்களின் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தின் வெற்றியில் தான் தமிழ் சினிமாவின் நாகரிகம் அடங்கியுள்ளது என நம்புகிறேன்.” என்றார்.

 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி படம் குறித்து கூறுகையில், “தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முளைக்க செய்யும் முதல் முயற்சிதான் இந்த சினிமா. அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர்.கே.சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார். இந்தப் படத்துக்கு மரணம் இல்லை. காலத்துக்கும் பெயர் சொல்லும் படைப்பு இது. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே, அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். ஆர்.கே.சுரேஷூக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.” என்றார்.

 

இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ”’விசித்திரன்’ என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை எனத் தலைவரிடம் சொன்னேன். உடனேயே மற்றைய உறுப்பினர்களுக்காக சிறப்புக் காட்சியை தயார் செய்ய சொன்னார். அந்த ஏற்பாட்டின்படி இன்று நாம் அனைவருமே படத்தைப் பார்த்துவிட்டோம். என்னைப் போலவே உங்களுக்குள்ளும் இந்தப் படம் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் சரவண சக்தி பேசுகையில், “’விசித்திரன்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் முதலே ஆர் கே சுரேஷ் எவ்வளவு சிரமப்பட்டார் என்பது எனக்கு தெரியும். நாள் ஒன்றிற்கு தண்ணீர், பழங்கள், பழைய சோறு என அனைத்தையும் உண்டு உடம்பை ஏற்றினார். அப்போது நான் உடலை குறைப்பது எவ்வளவு கடினம் தெறியும் எதற்க்கு இவ்வளவு கஷ்டப்படுகிறாய் என்றேன். அதற்க்கு அவர் ”இல்லை நான் என் முழு நடிப்பை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்துவேன்.” என்றார்.

 

அதற்கு முன் ’ஜோசப்’ படத்தை பார்த்துவிட்டு இந்த படம் சிறிது மெதுவான கதைக்களத்துடன் நகர்கிறதே எப்படி சமாளிக்க போகிறாய் என்றபோது இல்லை இந்த படம் என் நடிப்பிற்கு மிக பெரும் வெற்றியையும் பெருமையையும் சேர்க்கும் என்று ஆர் கே சுரேஷ் அவர் நடிப்பின் மீது வைத்த வீண் போகவில்லை என்பதை படத்தை பார்த்தபோது புரிந்துகொண்டேன். எப்போதுமே சமூக பிரச்சனையை பேசும் படம் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்று தருமா என அச்சம் இருக்கும் ஆனால் அதை கடந்து இன்று சாதித்திருக்கும் என் நண்பன் ஆர் கே சுரேஷுக்கு பாராட்டுக்கள்.” என்றார்.