Dec 27, 2021 06:47 PM

பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் மரணம்!

பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் மரணம்!

பிரபல பின்னனி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. 

 

மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணிக்க விநாயகம்,1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியவர். கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான இவர் தமிழில் விக்ரம் நடித்த ’தில்’ படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் ”கண்ணுக்குல கெழுத்தி…” என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார்.

 

தொடர்ந்து பல படங்களில் பல வெற்றிப் பாடல்களை பாடி வந்தவர், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

 

மேலும், பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். ’திருடா திருடி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து தில், யுத்தம் செய், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 

இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மாணிக்க விநாயகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.