பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையே, பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு நடிக்கிறார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தில், சரத்குமார், ஹிருது ஹரூன், டிராவிட் செல்வம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 4 வது படமான இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. படத்தின் முதல் காட்சி பிரதீப் ரங்கநாதன் இடம் பெறும்படி படமாக்கப்பட்டது. தீவிரமான காட்சிகளுடன் தொடங்கி விளையாட்டான முத்தத்துடன் இந்த காட்சி முடிவடைந்தது. இதிலிருந்து இந்த படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் சார்ந்து ஒரு நியூ ஏஜ் கதையாக இருக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். லதா நாயுடு தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், பரத் விக்ரமன் எடிட்டராகவும் பணியாற்றுகிறார்.