Apr 13, 2024 04:31 AM

’ஓ மை கடவுளே’ இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன்!

’ஓ மை கடவுளே’ இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன்!

ஜெயம் ரவியின் ‘மோமாளி’ படம் மூலம்  இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தனது இரண்டாவது படமான ‘லவ் டுடே’ மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குநர் மற்றும் நடிகராக அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன், மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

 

இந்த முறை இயக்குநராக அல்லாமல் நாயகனாக ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் இணைந்திருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கும் தலைப்பு வைக்காத இப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

காணொலி மூலம் இப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் நிஜ வாழ்க்கை நட்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள நகைச்சுவை ததும்பும் இந்த வீடியோ, வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 26 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்க, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். லியோ ஜேம்ஸ் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு நிர்வாகத்தை எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம் கவனிக்கிறார்.

 

வரும் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், படம் குறித்து கூறிய கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “’லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரதீப் ரங்கநாதனையும், 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஷ்வத் மாரிமுத்துவையும் இணைப்பதில் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மகிழ்ச்சி அடைகிறது. இந்த புதிய திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டையும் கட்டாயம் பெற்று ஏஜிஏஸ் நிறுவனத்தின் வெற்றிப்பட வரிசையில் இடம் பிடிக்கும்.” என்றார்.