பிரஜின் நடிப்பில் உருவாகும் மெகா ஆக்ஷன் திரைப்படம் ‘சிறைவாசி’!

’தரைப்படை’ படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராம்பிரபா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு ‘சிறைவாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரஜின் நாயகனாக நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஸ்டோனெக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் குடவரசி மூவி கிரியேஷன்ஸ் நிறுவன்னக்கள் சார்பில் பி.பி.வேல்முருகன் மற்றும் என்.வைத்தியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, நடிகர்கள் ரோபோ சங்கர், சவுந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி படத்தை துவக்கி வைத்தனர். மேலும் ஏராளமான பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜுபின் இசையமைக்கிறார். கோபி படத்தொகுப்பு செய்ய ரவிந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க ராக் சங்கர் மற்றும் ஸ்ரீ செல்வி நடனக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். மக்கள் தொடர்பாளராக நிதிஷ் ஸ்ரீராம் பணியாற்றுகிறார்.
படம் குறித்து இயக்குநர் ராம்பிரபா கூறுகையில், “நான் இயக்கிய முதல் படம் ‘தரைப்படை’. அடுத்த மாதம் அந்த படம் வெளியாக இருக்கும் நிலையில், என்னுடைய இரண்டாவது படத்தை இன்று தொடங்கியிருக்கிறோம். முதல் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்கள். என்னுடையா பெஸ்ட் ஹீரோ, தரைப்படை படத்தின் ஹீரோ பிரஜின் தான் இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் கரு என்னவென்றால், 20 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்து விட்டு விடுதலையாகும் ஒருவன், தன்னைப் போல் பிறர் சிறை தண்டனை அனுபவிக்க கூடாது என்று எண்ணுகிறார். அதனால், இந்த சமூகத்தில் குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்கிறார். அதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அதிரடியான ஆக்ஷனோடு சொல்கிறோம். வட சென்னையை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் சண்டைக்காட்சிகள் பெரிதாக பேசப்படும். அக்டோபர் 15 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம், படத்தை நான்கு மாதங்களில் முடித்துவிடுவோம், நன்றி” என்றார்.
படத்தின் நாயகன் பிரஜின் பேசுகையில், “ராம்பிரபா சாருடன் இது எனக்கு இரண்டாவது படம். நாங்கள் இணைந்து தரைப்படை என்ற படத்தை முடித்துவிட்டோம். கேங்ஸ்டர் கதையான அந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதே குழுவினருடன் இரண்டாவது படம் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இவர்களுடன் பல படங்கள் பண்ணுவேன். இந்த படத்தை வித்தியாசமான முறையில், மிகப்பெரிய பொருட்ச் செலவில் தயாரிக்கிறார்கள். இயக்குநர் சொன்னது போல் ஆயுள் தண்டனை அனுபவித்த ஒருவன், இனி குற்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்று நினைக்கிறான். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்ற நிலையை மாற்றியமைக்கும் விதத்தில் அவன் வாழ தொடங்குகிறார் என்ற ரீதியில் கதை இருக்கும். வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு வெற்றிமாறன் சாரின் ‘வட சென்னை’ படத்தை சொல்லலாம். அப்படி ஒரு வகையில் வித்தியாசமான திரைக்கதையோடு ராம்பிரபா சார் இந்த படத்தை இயக்க இருக்கிறார். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில், “சிறைவாசி எனக்கு முக்கியமான படம். ருத்ரதாண்டவம் படத்திற்கு பிறகு ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன், அவை ஒன்வ்வொன்றாக வெளியாக இருக்கிறது. சிறைவாசி படத்தில் பின்னணி இசைக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். சிறைவாசி என்னை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்லும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் பி.பி.வேல்முருகன் பேசுகையில், “இதே குழுவினரை வைத்து ‘தரைப்படை’ என்ற படத்தை தயாரித்திருக்கிறேன். மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள அந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், எங்களுடைய அடுத்த படத்தை அதே குழுவினருடன் தொடங்கியிருக்கிறேன். இந்த படம் ‘கே.ஜி.எப்’ பாணியிலான மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. எங்கள் குழுவினர் அனைவரும் கடுமையாக உழைக்க கூடியவர்கள். அதனால் தான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே இரண்டாவது படத்தை தொடங்கியிருக்கிறோம். நிச்சயம் இந்த படமும் மிகப்பெரிய படமாக இருக்கும்.” என்றார்.
ஸ்டண்ட் இயக்குநர் மிரட்டல் செல்வா பேசுகையில், “ராம்பிரபா சாரின் முதல் படமான ‘தரைப்படை’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். அந்த படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது. சிறைவாசி அதைவிட மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும். வெற்றிமாறன் சாரின் வடசென்னை படத்தை விட பல விசயங்கள் இதில் இருக்கிறது. நிச்சயம் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆக்ஷன் படமாக இருக்கும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் பேசுகையில், “இந்த படக்குழுவினருடன் எனக்கு இரண்டாவது படம், மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் படத்தை 15 நாட்களுக்கு முன்பு தான் முடித்தோம், உடனே இரண்டாவது படம் தொடங்கியது எனக்கு பெரும் உற்சாகமாக இருக்கிறது. சார் சொன்னது போல வட சென்னையை மையப்படுத்தி வெளியான படங்களின் வரிசையில் சிறைவாசி முக்கியமான படமாக இருக்கும். வட சென்னையை பற்றி பல விசயங்கள் படத்தில் இருப்பதோடு, அதிரடியான சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய அளவில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் இது மிகப்பெரிய படமாக இருக்கும்.” என்றார்.
மற்றொரு தயாரிப்பாளர் என்.வைத்தியா பேசுகையில், “தரைப்படை படத்தை தொடர்ந்து இரண்டாவதாக சிறைவாசி படத்தை தயாரித்திருக்கிறோம். இது கே.ஜி.எப் பாணியிலான ஒரு ஆக்ஷன் படம். தரைப்படை படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்திருக்கிறது, அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல் இந்த படமும் நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறோம்.” என்றார்.
’ரத்தம் பார்க்க யுத்தம் தேவை’ வாக்கியத்துடன் ‘சிறைவாசி’ தலைப்பு மற்றும் பிரஜினின் கோபமான பார்வை கொண்ட புகைப்படத்துடன் வெளியாகியிருக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.