ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் ‘கடுவா’! - நடிகர் பிரித்விராஜ் பெருமிதம்
சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதோடு, இந்தியா முழுவதும் வெற்றியடைகிறது. இதனால் ஆக்ஷன் படங்களில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், மாஸ் ஆக்ஷன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன மலையாள சினிமாவில் அதிரடி மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது ‘கடுவா’
பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜினு ஆபிரகாம் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் வசனத்தை ஆர்.பி.பாலா எழுதியுள்ளார்.
பிரித்விராஜ் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் விவேக் ஒபராய், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, விடிவி கணேஷ், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், நடிகர்கள் ஆர்யா, ஜீவா, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட நடிகர்கள் பிரித்விராஜ், விவேக் ஒபராய், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரித்விராஜ், “மலையாள திரையுலகில் தொடர்ந்து புதுப்புது கதையம்சத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்சன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கே கூட அந்த எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த கடுவா திரைப்படம் உருவாகியுள்ளது. இரண்டு வருடத்திற்கு முன்பே இந்தப்படம் தொடங்கப்பட்டாலும் கொரோனா தாக்கம், வெள்ள பாதிப்பு என பலவிதமான இடர்பாடுகளை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளது. நிச்சயம் ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக இது இருக்கும்” என்றார்.
இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரித்திவிராஜ் பான் இந்திய படங்கள், ஓவர்சீஸ் உரிமை, மாறி வரும் ஜானர் என பல விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்கும் கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றிய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் ஷாஜி கைலாஷும், பிரித்விராஜும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.