இயக்குநரான தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே!
ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், தேசிய விருது வென்ற ’தங்க மீன்கள்’ மற்றும் ’குற்றம் கடிதல்’, ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ’மதயானைக் கூட்டம்’, ’தரமணி’, ’புரியாத புதிர்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஜே.சதீஷ் குமார், நடிகராக அறிமுகமாகி பல படங்களில் சிறப்பான நடிப்பு மூலம் பாராட்டு பெற்று வருகிறார்.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நடிகராக இருக்கும் ஜே.சதீஷ் குமார், ஜே.எஸ்.கே என்ற பெயரில் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் திரில்லர் ஜானர் திரைப்படமான இதற்கு ‘ஃபயர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள்.
பெண்களின் விழிப்புணர்வு குறித்து பேசும் 'ஃபயர்' திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த ஜே எஸ் கே, ”இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும். தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில், பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது. இந்த சமூக பார்வை மாறினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல எனும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டு செல்லும்” என்றார்.
மேற்கண்ட விஷயங்களை சிறிதும் சுவாரஸ்யம் குறையாமலும், அதே சமயம் சமுதாய விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் ஃபயர் எடுத்துரைக்கும் என்றும், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படமாக இது இருக்கும் என்றும் ஜே எஸ் கே மேலும் தெரிவித்தார்.
ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.கே தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளட் டிகே இசையமைக்கிறார். எஸ்.கே.ஜீவா வசனம் எழுத, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்குநராக பணியாற்ற, மதுர கவி மற்றும் ராவ் பாடல்கள் எழுதுகின்றனர். டினா ரோசாரியோ ஆடை வடிவமைப்பு பணியை கவனிக்க, நிகில் முருகன் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார்.
சமீபத்தில் தொடங்கிய ‘ஃபயர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.