83 வயதில் ஹீரோவாகும் பி.வி.நம்பிராஜன்!
‘என் ராசாவின் மனசிலே’, ‘அரண்மனை கிளி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பி.வி.நம்பிராஜன், கதையின் நாயகனாக ‘அஸ்திவாரம்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
வில்லன், குணச்சித்திரம் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் பி.வி.நம்பிராஜன், தனது 83 வயதில் கதையின் நாயகனாக நடிப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்த செய்திருக்கிறது.
ஜி.ஜி.ஆர் மூவி எண்டர்பிரைசஸ் சார்பில் தொழிலதிபர் ஏ.இசட்.ரிஸ்வான் தயாரிக்கும் இந்த படத்தில் இளம் நாயகன் ஒருவரும் அறிமுகமாக, முன்னணி நடிகர், நடிகைகள் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இயக்குநர் பாரதி கணேஷிடம் பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய உடைமை எஸ்.அஜ்மீர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் எஸ்.அஜ்மீர் கூறுகையில், “தமிழ் திரை உலக வரலாற்றில் 83 வயது முதியவர் கதாநாயகனாக நடிப்பது இதுதான் முதல்முறை என்றால் அது மிகையாகாது. வயது குறைந்த நடிகர்கள் மேக்கப் போட்டு முதுமை தோற்றத்தில் நடித்த படங்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல். ரஜினி, விஜயகாந்த், வி.கே.ஆர், சத்யராஜ், பிரபு, சரத்குமார், என நிறைய நடிகர்கள் அப்படி நடித்த படங்கள் உள்ளது. ஒரிஜினலாக 83 வயதுடைய பி.வி.நம்பிராஜன் நாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவில் நடக்கும் புதுமை. இந்தப்படம் முற்றிலும் மாறுபட்டு, முழுவதும் வேறுபட்டு இருக்கும் என்று நான் கூறமாட்டேன். இதைவிட மேலான வார்த்தைகளை படம் பார்த்தபின் பார்த்தவர்கள் கூறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த ‘அஸ்திவாரம்’ படத்தின் கதையை அமைத்துள்ளேன்.” என்றார்.
நவம்பர் மாதம் தொடங்க உள்ள இப்பட்த்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பித்தளைபட்டி, ஆத்தூர், சின்னாளபட்டி, பிளையார்நத்தம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. படத்தை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.