Apr 05, 2023 08:08 AM

பைக் ரேசை முறைப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - ‘ரேசர்’ படத்தின் இயக்குநர் வலியுறுத்தல்

பைக் ரேசை முறைப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - ‘ரேசர்’ படத்தின் இயக்குநர் வலியுறுத்தல்

அறிமுக இயக்குநர் சதீஷ் ரெக்ஸ் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ரேசர்’. ஹஸ்ட்லர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Hustlers Entertainment) நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் அகில் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் புகழ் லாவண்யா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆறு பாலா, ’திரவுபதி’ சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பரத் இசையமைத்திருக்கிறார். கனியமுதன் கலை இயக்குநராக பணியாற்ற, சீனு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 

வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ரேசர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் படம் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், காத்து கருப்பு பாலா, பி.ஆர்.ஓ சங்கத்தின் தலைவர் டைமண்ட் பாபு, தயாரிப்பாளரும் நடிகருமான ராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் சதீஷ் பேசுகையில், “ரேசர் படத்தை இந்தியன் ஐகான் பைக் ரேஸ் சாம்பியன்  ரஜினி கிருஷ்ணன் தான் வழங்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்,  அவர் இங்கு வந்திருப்பது சிறப்பு. இவர் வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் சந்தித்திருக்கிறார், அவரைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன்.

 

சிலருக்கு வாழ்க்கையைல் லட்சியம் இருக்கும், பைக் ரேசர்  ஆக வேண்டும் என்று எண்ணுவார்கள், ஆனால் பைக் விலை அதிகமாக இருக்கும். இந்த படத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ட்ரீட் ரேஸும் ஒரு விளையாட்டுத்தான். அதை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்று இதில் கூறப்பட்டிருக்கும். இங்கு நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். அதை இந்த படம் பார்க்கும் போதும் புரியும்.   ரஜினி கிருஷ்ணன் போன்றவர்களைப் பற்றி ரேசர் படத்தில் சொல்லியிருக்கிறோம். இதை சமூதாயத்துக்கு ஒரு பொறுப்புணர்வுடன் தான் சொல்லியிருக்கிறோம். ரேஸ் போகிறவர்கள் எந்த விபத்திலும் சிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

 

ஒரு புது இயக்குநர் பைக் ரேஸ் ஸ்கிரிப்ட்டுடன் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல முயன்றால் அதெல்லாம் வேண்டாம் நிறைய செல்வாகும் என்று கூறுவார்கள். ஆனால் எங்கள் டீமை நம்பி இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார் சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு படம் பிடித்திருந்தது. படத்தை பெரிதாக செய்யாலாம் என்று எண்ணிய போது கார்த்திக் ஜெயாஸ் வந்தார். படத்துக்காக எல்லாமே அவர் செய்தார்.  மூன்றாவதாக நன்றி சொல்ல வேண்டுமென்றால் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஸ் சார். சினிமா ஆரோக்கியமாக இருப்பதற்கு ஜெனிஸ் சார் காரணம் என்று கூறுவேன். அவரால் தான் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அளவுக்கு வந்திருக்கிறது. இந்த படம் உருவாவதற்கு காரணம் இப்படத்தின் ஹீரோ அகில் சந்தோஷ். அவர் தான் தாயாரிப்பாளரை எனக்கு கொடுத்தார். இன்று வரை அவர் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். 

 

ஹீரோயின் லாவண்யா நான் யோசித்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். அவரிடம் கதை சொன்னவுடன் நடிக்கிறேன் என்றார். முழுநாளும் படப்பிடிப்பு நடக்கும் தொடர்ச்சியாக இருந்து நடித்துக்கொடுத்தார், படப்பிடிப்புக்கு துணிச்சலாக தனியாகவே அவர் வந்து நடித்தது எங்கள் குழு மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையாகும். அவருக்கு நன்றி. அடுத்து என்னுடைய டீம் நான், பிரபா, பரத்.  பள்ளியில் படிக்கும்போதிருந்தே எங்களுக்கு சினிமாவுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, நான் இயக்குவேன், பிரபா கேமிரா எடுப்பார். பரத் இசை அமைப்பார். தயாரிப்பாளரிடம் என் டீமை வைத்து தான் இந்த படம் செய்வேன் என்ற போது அவர் ஒப்புக்கொண்டார். அதேபோல் என்னுடைய உதவியாளர்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து உழைத்ததுதான் ரேசர் படம். இந்த படத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சுமூகமாக முடித்துகொடுத்து விடுவார் எக்ஸிக்யூட்டிவ்

 

தயாரிப்பாளர் ஹேமா. மேலும் இப்படத்தில் ப்ளு சட்டை அணிந்து ஒருவர் நடித்திருப்பார் அவர் தான் என் தந்தை. இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அவர் இறப்பதற்கு முன் என்னிடம் சொன்ன வார்த்தை, நீ  எப்படியும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது தான் அவர் ஆசைப்படி நான் சாதித்துக்காட்டுவேன்.” என்றார்.

 

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “சினிமாவுக்கு வரும்போது படம் எப்படி எடுப்பது என்பதை தெரிந்துக்கொண்டு வாருங்கள். படம் நன்றாக இருந்தால் ஒடும் டாடா, லவ் டுடே படங்கள் சிறிய படங்களாக இருந்தாலும் நன்றாக ஓடி வசூல் ஈட்டியது.

படங்களுக்கு டைட்டில் தமிழில் வைக்க வேண்டும். தமிழில் வையுங்கள். ரேஸர் படம் டிரைலர் நன்றாக இருந்தது. சினிமாவுக்கு என்ன தேவை என்பதை அரசிடம் ஒன்றாக சேர்ந்து சென்று கேளுங்கள்.” என்றார்.

 

ஹீரோ அகில் சந்தோஷ் பேசுகையில், “இப்படத்தின் இயக்குனர் கனவு ரொம்ப பெரியது, அதை தயாரிப்பாளர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். எல்லோரும் கடுமையான உழைத்திருக்கிறோம். ரேசர் பற்றிய கதை என்றாலும் அப்பா மகன் உறவை எதார்த்தமாக இக்கதை கூறும், எல்லோரும் அந்த்தந்த வேடத்தில் ஒன்றி நடித்திருக்கிறார்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர்  கார்த்திக் ஜெயாஸ் பேசுகையில், “நான் சிறுவயதாக இருக்குபோதே என் தந்தை இறந்துவிட்டார், அதன்பிறகு க‌ஷ்டப்பட்டு படித்தேன். ஓட்டல் வேலை முதல் எல்லா வேலையும் செய்து, பிறகு வியாபாரம் செய்து தற்போது ஒரு தயாரிப்பாளராக இங்கு நிற்கிறேன். ரேஸர் படம் எல்லோரையும் கவரும் படமாக இருக்கும்.” என்றார்.

 

ஹீரோயின் லாவண்யா பேசுகையில், “நான் டிவிக்கு வருவதற்கு முன்பே எனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் சதீஷ். இந்த படம் ரொம்ப நன்றாக இருக்க காரணம் இயக்குனர் தான். ஹீரோ அகில் சந்தோஷ் என்னுடன் நட்பாக பழகினார்.” என்றார்.

 

மேலும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷ்ன் ஜெனிஸ், பைக்ரேஸ் சாமியன் ரஜினி கிருஷ்ணன், பி ஆர் ஒ சங்க தலைவர் டைமண்ட் பாபு, கேபிள் சங்கர், நடிகர் ராஜா, சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன், காத்து கருப்பு கலை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.