Oct 21, 2017 12:21 PM

வடிவேலுவின் அந்தக் காட்சி - மெர்சலால் பா.ஜ.க-வுக்கு வந்த அந்த நிலை!

வடிவேலுவின் அந்தக் காட்சி  - மெர்சலால் பா.ஜ.க-வுக்கு வந்த அந்த நிலை!

ஒரு படத்தில் வடிவேலு தன்னை மறைந்து நின்று அடித்தவர்களை அடிக்க, ரவுடி ஒருவரை கூட்டிட்டு வந்து, சானியால அடிவாங்க வைப்பாறே, அந்த காட்சி ஞாபகம் இருக்கா, அதுபோல தான் தற்போது தமிழக பா.ஜ.க தலைவர்கள் பிரதமர் மோடியை தமிழக மக்களின் விமரசங்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

 

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் சூப்பராக இல்லாவிட்டாலும், சுமாராக இருந்தாலே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து வெற்றி படம் கொடுப்பது என்பது குதிரை கொம்பாக உள்ள இந்த சூழலில், இயக்குநர் அட்லி ‘மெர்சல்’ படத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையிலான பொழுது போக்கு படமாக இயக்கியிருப்பதோடு, சமூக அக்கறையுடன் கூட சில கருத்துக்களையும் வசனங்களையும் படத்தில் வைத்துள்ளார். இது சமூக ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

இதை இப்படியே விட்டிருந்தால், படம் 50 நாட்களோ அல்லது 100 நாட்களோ ஓடிவிட்டது என்ற போஸ்டருடன், அந்த படத்தின் வசூலை மிஞ்சிவிட்டது, இந்த படத்தின் வசூலை மிஞ்சிவிட்டது என்ற விளபரத்துடன் மெர்சல் படத்தின் சத்தம் அடங்கியிருக்கும்.

 

ஆனால், சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானா ஆண்டி, என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, தமிழக பா.ஜ.க தலைவர்கள் மெர்சல் படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தற்போது ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்ப்பையும் பெற்று வருகிறார்கள்.

 

இரண்டு நாட்களுக்குள் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி சம்மந்தமான வசனத்தை நீக்காவிட்டால், திரையரங்குகளில் படம் ஓடாது, என்று விஜயின் மெர்சல் படத்திற்கு ஜோராக மிரட்டல் விடுத்த தமிழக பா.ஜ.க தலைவர்கள், தற்போது ஏன்? அப்படி பேசினோம் என்று வருத்தப்படும் அளவுக்கு, தமிழ் திரையுலக பிரமுகர்கள் மட்டும் இன்றி அரசியல் தலைவர்கள் பலர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பேசி வருவதோடு, பல தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளிலும் விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது.

 

இதற்கிடையே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, "மிஸ்டர் மோடி, தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழி உணர்வின் ஆழமான வெளிப்பாடுதான் சினிமா. மெர்சல் படத்தில் தலையிடுவதன் மூலம் தமிழர் பெருமையை டீமானிடைஸ் பண்ண தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது படத்திற்கு மேலும் விளம்பரத்தை அதிகரித்திருப்பதோடு, தென்னிந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய ‘மெர்சல்’ படத்தை வட இந்தியாவிலும் வெற்றிகரமாக ஓட வைத்திருக்கிறது.

 

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர்களின் ஒருவரான எச்.ராஜா, ஜோசப் விஜய், என்று நடிகர் விஜய்க்கு மத முத்திரை குத்த முயல அதற்கு, இயக்குநர் கரு.பழனியப்பன் ஜோசப்பும் விஜயும் இந்தியர்கள் தான், என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அதேபோல், சமூகத்திற்கு தேவையான படம் தானே, அப்போ இலவசமாக திரையிட வேண்டியது தானே, என்று தமிழசை சவுந்தரராஜன் கூறியதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஷாநவாஸ், மக்களுக்கான சாலை எனில், எதற்கு சுங்கக் கட்டணம்? என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

இப்படி பா.ஜ.க தமிழக தலைவர்கள் மெர்சல் படத்திற்கு எதிராக போடும் அனைத்து பந்துகளுக்கும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஒட்டு மொத்த தமிழர்களும் சிக்ஸர்களாக விளாசிக்கொண்டிருக்க, முதல் பேராவில் சொன்னது போல, சும்மா இருந்த பிரதமர் மோடியையும், தேசிய பா.ஜ.க வையும், வடிவேலு கணக்கா இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே நம்ம தமிழக பா.ஜ.க தலைவர்கள், என்று பா.ஜ.க தொண்டர்களே கவலைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.