ரஜினி கட்சியில் தொழிலதிபர்கள், நடிகர்களுக்கு முக்கியத்துவம்!
புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதன் மூலம் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், பா.ஜ.க-வின் அம்பு என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதேபோல், அவரது ஆன்மீக அரசியல் குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறவர்கள், தமிழகத்தின் எந்த பிரச்சினையிலும் குரல் கொடுக்காத ரஜினிகாந்த், முதல்வராக ஆசைப்படுவது நியாயமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் அரசியல் கட்சியில் தொழிலதிபர்களுக்கும், நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவேன், என்று அறிவித்ததும் அவரை பல தொழிலதிபர்கள் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாரார்களாம். அதேபோல், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லைகா நிறுவனத்தின் இந்திய அதிகாரியான ராஜு மகாலிங்கம் என்பவர், அந்த பதவியில் இருந்து விலகி ரஜினிகாந்தின் கட்சியில் சேர போவதாக தெரிவித்துள்ளார். இவர் தமிழக பிரச்சினைகளில் எந்தவித ஈடுபாடும் காட்டாதவர் என்றாலும், கடந்த பல மாதங்களாக ரஜினிகாந்துடன் நெருங்கி பழகி வருகிறார். மேலும், இவர் பணிபுரிந்த லைகா நிறுவனம் பல கோடி சொத்துக்களை கொண்டது.
அதேபோல், நடிகர் ராகவா லாரன்ஸும் ரஜினியுடன் இணைந்து அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்த லாரன்ஸ், அங்கு நடைபெற்ற தடியடிக்கு பிறகு மக்கள் பிரச்சினை எதிலும் தலையிடாமல் அமைதி காத்தவர், அரசியலில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் கூறினார். ஆனால், தற்போது ரஜினிகாந்த் கட்சியில் அவர் இணைய உள்ளார்.
இதேபோல, பல தொழிலதிபர்கள் ரஜினிகாந்தின் கட்சிக்கு நிதி வழங்க உள்ளதாகவும், கட்சியில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் குறைந்தது ரூ.1 கோடி வசூல் செய்யவும் ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் அரசியல் கட்சி நடத்த வேண்டும் என்றால் அதற்கு பல கோடி பணம் தேவை என்றும், அந்த பணத்தை அரசியல் கட்சிகளுக்கு தொழிலதிபர்கள் தான் கொடுக்கிறார்கள், என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதுபோல தொழிலதிபர்களிடம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதால், ஆட்சிக்கு வந்ததும் தொழிலதிபர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.