ரஜினியால் முதல்வராக முடியாது! - பிரபல நடிகர் கருத்து
இன்று முதல் ரசிகரக்ளை சந்திக்க தொடங்கியுள்ள ரஜினிகாந்த், இன்று நடைபெற்ற முதல் நாள் சந்திப்பில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் நிலைபாட்டை அறிவிக்க உள்ளதாக கூறினார். மேலும், அரசியல் தெரிந்ததால் தான், வருவதற்கு தயங்குகிறேன், என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியின் இத்தகைய பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகர், “ரஜினி நிலைப்பாடு என்ன என்று ரஜினிக்கே தெரியாது. 31ம் தேதி ஆண்டவன் என்ன சொல்கிறானோ அதையே தான் ரஜினி செய்வார். 1996ல் தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை ரஜினி கைநழுவிவிட்டார். அப்போது விட்ட சந்தர்ப்பத்தை 2017ல் ரஜினியால் பிடிக்க முடியுமா என்பது அவர் தான் தீர்மானிக்க வேண்டும். வியூகம் வகுத்துக்கொண்டே இருந்தால் போர் முடிந்துவிடும். போருக்கு முன்னாடி தான் வியூகம் வகுக்க வேண்டும். போர் வந்த பிறகு இல்லை. நான் வியூகம் வகுக்கப் போறேன், போரைத் தள்ளிப்போடுங்கள் என்று சொல்ல முடியாது.
குடும்பத்தார் விரும்பவில்லை எனவே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் ரஜினியின் குடும்பத்தார் யாரும் இதுவரை அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லை.
இன்று தமிழருவி மணியன் மட்டுமே ரஜினி வரவேண்டும் என்று வாய்ஸ் கொடுக்கிறார். ரஜினி அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று அமிதாப் பச்சன் சொன்னால் நன்றாக இருக்கும், தமிழருவி மணியன் சொல்வது காமெடியாக இருக்கிறது. தமிழருவி மணியன் 6 மாதம் முன்னாடி கமல் வந்தால் நல்லா இருக்கும் என்றார், அதற்கு 6 மாதம் முன்னாடி வைகோ வந்தால் நல்லா இருக்கும் என்றார்.
46 வயதில் விட்ட விஷயத்தை 68 வயதில் பிடிக்க முடியுமா? என்பது தான் கேள்வி. அப்படி ஒருவேளை சாதித்தால் கடவுளின் அருள் ரஜினிக்கு இருக்கிறது என்பது தான் அர்த்தம். அவர் என்னுடைய நண்பர் தான், புகழ்பெற்றவர்கள் ஒரு எம்எல்ஏ ஆக முடியும், ஆனால் முதல்வராக முடியுமா? என்பது தெரியாது.
ஆர்கே நகரில் கூட பணம் ஜெயித்தது என்கிறார்கள், ஆனால் பணத்தைத் தாண்டி சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர் தினகரன் என்பது தான் இதில் பார்க்க வேண்டும். ஜெயலலிதா காலில் விழுந்த போது கூடவே சசிகலா காலில் விழுந்தவர்கள் தான் இன்று பதவியில் இருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.