Dec 31, 2017 07:40 AM

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்த ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தயராகிவிட்டார், என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி வந்தாலும், ரஜினிகாந்த் மீண்டு மவுனம் காக்க தொடங்கியதால் மக்கள் குழப்பமடைந்தனர்.

 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார், என்று ஒரு தரப்பினர் கூறி வந்ததோடு, ரஜினிகாந்தையும், அவரது அரசியல் பிரவேசத்தையும் வைத்து திரைப்படங்களில் கூட சில கிண்டல் செய்தனர்.

 

இதற்கிடையே, கடந்த வாரம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தொடங்கிய ரஜினிகாந்த், 31 ஆம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன், என்று கூறியதால் மக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்ட்டது.

 

அதன்படி, ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று (டிச.31) ரஜினிகாந்த் அரசியலுக்கு தான் வருவது உறுதி என்பதை அறிவித்தவர், புதிய அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன், என்று அறிவித்துள்ளார்.

 

இது குறித்து ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினிகாந்த், “ரசிகர்கள் இந்த அளவுக்கு கட்டுப்பாட்டோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். நான் அரசியலுக்கு வருவதைப் பார்த்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்து தான் பயம். நான் எதையாவது சொல்ல அது விவாதமாகிவிடுகிறது.

 

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை.  நான் பணம், பெயர் மற்றும் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

 

இப்போது அரசியல் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் சீட்கெட்டுப் போய்விட்டது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.” என்று தெரிவித்தார்.

 

ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்ததோடு, பட்டாசு வெடித்து கொண்டாடியும் வருகிறார்கள்.