Jul 14, 2021 02:32 PM

‘கே.ஜி.எப்’ பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

‘கே.ஜி.எப்’ பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

’கே.ஜி.எப்’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தற்போது ‘கே.ஜி.எப் 2’ மற்றும் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ’சாலர்’ ஆகிய படங்களை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

 

இந்த நிலையில், ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தங்களது 10 வது திரைப்படத்தை அறிவித்துள்ளது. இப்படம் முலம் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரக்‌ஷித் ஷெட்டியுடன் ஹொம்பாலே நிறுவனம் கைகோர்த்துள்ளது. ‘ரிச்சர்ட் அந்தோணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்குகிறார்.

 

இப்படம் குறித்து ஹொம்பாலே பிலிம்ஸின் விஜய் கிரகந்தூர் கூறுகையில், “ரக்‌ஷித் ஷெட்டியுடன் எங்களின் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். 'ரிச்சர்ட் அந்தோணி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ரக்‌ஷித் தான் இயக்குநர். ஹீரோவாகவும் நடிக்கிறார். ரக்‌ஷித் ஷெட்டியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவரின் நாடி நரம்பெல்லாம் சினிமா ஊறியுள்ளது. சினிமாத்துறையில் அவரின் வளர்ச்சி அபரிமிதமானது. அடிமட்டத்திலிருந்து தனது படைப்பாற்றலாலும் அர்ப்பணிப்பாலும் இந்த உயரத்தை அவர் எட்டியுள்ளார். எங்களின் ஹொம்பாலே பிலிம்ஸின் 10வது படத்தில் ரக்‌ஷித் ஷெட்டியுடன் கைகோர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்தப் படம் புத்துணர்ச்சியூட்டும் படமாக இருக்கும். நிமிடத்துக்கு நிமிடம் அடுக்கடுக்கான மர்மங்கள் நிறைந்த திரைப்படம். இந்தப் படத்தின் தயாரிப்பு 2022ல் தொடங்கும். இந்தப் படத்தின் மூலம் உங்கள் அனைவரையும் குதூகலிக்கச் செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

படம் பற்றி ரக்‌ஷித் ஷெட்டி கூறுகையில், “’ரிச்சர்ட் அந்தோணி’. ’உலிடவரு கண்டந்தி’ எனும் திரைப்படத்தின் அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், இது அதைவிடவும் இன்னும் சுவாரஸ்யமானது, பிரம்மாண்டமானது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் ’உலிடவரு கண்டந்தி’ எழுதும் போது அதற்கு அடுத்த பாகம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எல்லாமே விதிப்படி நடக்கும் என்பது போல் இது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் போல. இந்தக் கதை ஏற்கெனவே இருக்கும் ஒரு கதை. அதற்கான நேரம் வாய்த்த போது அதை நான் வடித்திருக்கிறேன். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன். இதன் அடுத்தக் கட்டத்தையும் நான் எழுதுவேன். இந்த உலகம் வாஞ்சையுடன் அதற்கான வாய்ப்பை எனக்கு நல்கும் என நம்புகிறேன். ஹொம்பாலே நிறுவனத்துடன் இணைந்திருப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். எங்களின் நட்பு என்றென்றும் தொடரும் என ஆழமாக நம்புகிறேன்.” என்றார்.